9ஆவது ரி20 உலகக்கிண்ணம். தென்னாபிரிக்காவை இன்று வேட்டையாடுமா இலங்கைச் சிங்கங்கள்; இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பம்
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் 4ஆவது லீக் ஆட்டமாகவும், இலங்கை மற்றும் குழு டீ இற்கான முதல் போட்டியாகவும் பலமிக்க தென்னாபிரிக்க அணியை இன்றைய தினம் இரவு 8 மணிக்கு எதிர்கொள்கின்றது வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆரம்பித்துள்ள 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி குழு டீ இல் இடம்பிடித்துள்ளது. இதில் தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. அதற்கமைய குழு டீ இற்கான போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கின்ற போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இலங்கை அணி தமது முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை நியூயோர்க்கில் உள்ள நசாவு கிரிக்கெட் அகெடமி மைதானத்தில் சந்திக்கின்றது. இவ்விரு அணிகளும் இதுவரையில் 17 ரி20 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் தென்னாபிரிக்கா அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இவ்விரு அணிகளும் உலகக்கிண்ண ரி20 போட்டியைப் பொறுத்தமட்டில் 4 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் இலங்கை அணி ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இவ்விரு அணிகளும் மொதியிருக்க அதில் இலங்கை அணியை தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்தது.
அப்போட்டி;யில் இலங்கை அணிக்கு அதிகூடிய ஓட்டங்களான 72 ஓட்டங்களை ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்க பெற்றுக் கொடுத்திருந்தார். தென்னாபிரிக்க பந்துவீச்சில் ஷம்சி 17 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். பின்னர் பதிலளித்த தென்னாபிரிக்க அணிக்கு அப்போதைய அணித்தலைவரான பவுமா 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார். இலங்கை சார்பில் பந்துவீச்சில் தற்போதைய அணித்தலைவரான வனிந்து ஹசரங்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
மேலும் இலங்கை அணி 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர் பங்கேற்ற பயிற்சி ஆட்டங்களில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்த போதிலும் , அயர்லாந்து அணியுடன் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய போட்டியில் இலங்கை சார்பில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சாதிக்கும் வீரரான முன்னால் அணித்தலைவரான தசுன் சானக்க திகழ்வார் என நம்பலாம். அத்தோடு அணித்தலைவரான வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம் இலங்கை அணிக்கு மிகத் தேவையான ஒன்றாக எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் இலங்கை பதினொருவர் அணி.
1. பெத்தும் நிசங்க
2. குசல் மெண்டிஸ்
3. கமிந்து மெண்டிஸ்
4. சதீர சமரவிக்ரம
5. சரித் அசலங்க
6. அஞ்சலோ மெத்யூஸ்
7. வனிந்து ஹசரங்க (அணித்தலைவர்)
8. தசுன் சானக்க
9. மகேஷ் தீக்சன
10. டில்ஷான் மதுசங்க
11. மதீஷ பத்திரன
எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க பதினொருவர் அணி.
1. குயிண்டன் டி கொக்
2. ரீசா ஹெண்ரிக்ஸ்
3. எடன் மார்க்ரம் ( அணித்தலைவர்)
4. ஹெண்ரிச் க்ளாசன்
5. டேவிட் மில்லர்
6. ட்ரிஸ்டன் ஸ்டெப்ஸ்
7. மார்கோ ஜென்ஸன்
8. கீஸோவ் மஹராஜ்
9. கிங்கிசோ ரபாடா
10. அன்ரிச் நோர்ட்ஜே
11. ஒட்டேனில் பார்ட்மென்
(அரபாத் பஹர்தீன்)