உள்நாடு

சீரற்ற காலநிலையால் 30.000 பேர் பாதிப்பு; 10 மரணங்கள்; இன்றும் மழை.

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது.

அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 02 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இயற்கை அனர்த்தங்களினால் 06 பேர் காயமடைந்துள்ள நிலையில், 06 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை காரணமாக 20 மாவட்டங்களில் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, இந்த 20 மாவட்டங்களிலும் 9764 குடும்பங்களைச் சேர்ந்த 30,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1381 குடும்பங்களைச் சேர்ந்த 5174 பேர் 51 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இயற்கை சீற்றத்தை அடுத்து, 1847 குடும்பங்களைச் சேர்ந்த 7292 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இதேவேளை, இந்த இயற்கை அனர்த்தங்களினால் 18 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 2564 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் பாதுக்கை பகுதிக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, இங்கிரிய, புலத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எலபாத்த, கிரியெல்ல, நிவிதிகல, கலவானை மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஆறுகளை அண்மித்து வாழும் மக்கள் தொடந்தும் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *