உள்நாடு

இலங்கையின் பங்கேற்புடன் வெற்றிகரமான நடந்து முடிந்த ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி – 2024

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் ரியாத் சுற்றுலாப் பயணக் கண்காட்சி (RTF) – 2024 கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்றது. இக்கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பை ரியாதிலுள்ள இலங்கை தூதரகம், இலங்கைச் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.

சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கைச் சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனங்களின் கண்காட்சி கூடத்தை திறந்து வைத்தார்.

மேற்படி திறப்பு நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான தேச சஞ்சார உறவுகள் பற்றி வரலாற்று ரீதியாக எடுத்துரைத்ததுடன், இலங்கையிலுள்ள சுற்றுலாத் தளங்கள் தோடர்பான தகவல்களை அரபு மொழியில் பகிர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் அவர் தனதுரையில் சவுதி அரேபியாவில் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைத் தூதுவராயத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்ற ‘அஹ்லன் ஸ்ரீலங்கா’ மற்றும், ‘இப்னு பதூதாவின் பயணப் பாதை’ மற்றும் ‘ஆதம் மலை நோக்கிய பயணம்’ போன்ற புதிய முன்னெடுப்புகளையும் அறிமுகம் செய்தார்.

நான்கு வருட நீண்ட இடைவெளிக்கு பின்னர் பதினெட்டு இலங்கைச் சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனங் களின் பங்கேற்புடனும் இக்கண்காட்சியில் இலங்கை பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இந்தக் கண்காட்சி சுற்றுலா மற்றும் உல்லாச பயண ஊக்குவிப்பு நிறுவனங்களுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டிருந்தது.

இக் கண்காட்சியின் இறுதி நாளன்று தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் , குறித்த கண்காட்சியில் கலந்து கொண்ட இலங்கை சுற்றுலாத் தள ஊக்குவிப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஒரு திறந்த கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவில் பயன்படுத்த முடியுமான வழிமுறைகள் மற்றும் சாதனங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் எமது நாடு பொருளாதார ரீதியில் எதிர்நோக்கி இருக்கின்ற இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்த முடிந்த மிகவும் கிட்டிய வழிமுறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது என்பதை வலியுறுத்திய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், சவுதி அரேபியாவில் இலங்கைச் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அனைத்து சுற்றுலாத்துறை நிறுவனங்களும் செயற்றிறனுடன் பங்கேற்க முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பயனுள்ள கருத்துக்களை தெரிவித்ததுடன், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாய்த்திருக்கின்ற மிகச் சிறந்த சந்தையாக விளங்கும் சவுதி அரேபியாவில் இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமாக பணியாற்ற முன்வருவதாகவும் இணக்கம் காணப்பட்டது.

மேற்குறித்த கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தும் நோக்கில், தூதரகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனங்களுக்கு மத்தியிலான கருத்து பரிமாறலை நோக்காகக் கொண்ட ஒரு தொடர்பாடல் ஊடகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தின் முடிவில் உடன்பாடு காணப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தூதரக பிரதானி திரு. மொஹமட் அனஸ் (HoC) மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வணிகச் செயலாளர் திருமதி தஷ்மா விதானவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *