தொடரும் சீரற்ற காலநிலை..! .கடும் மழை,வெள்ள அபாயம்…!
இன்று காலை 7 மணி நிலவரப்படி எஹலியகொடவில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பகுதியில் 427.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், இதே காலப்பகுதியில் இங்கிரிய ஹல்வத்துர தோட்டத்தில் 348.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸ பகுதியில் 283.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் அதேவேளை சாலாவ பிரதேசத்தில் 280.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளை சுற்றியுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக பாலமடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, அயகம, அலபாத்த, இரத்தினபுரி ஆகிய தாழ்நிலப் பிரதேசங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில்வலா ஆற்றின் மேல் பகுதியில் நேற்று (01) இரவு முதல் பெய்து வரும் கணிசமான மழை காரணமாக பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, ஆகிய தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிங் கங்கையின் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நெலுவ, தவலம, நாகொட, நயாகம, வெலிவிட்டிய திவித்துர, அல்பிட்டிய, அக்மீமன, பத்தேகம மற்றும் போபே ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.