விளையாட்டு

ஆரன் ஜோன்சின் அதிரடியில் உலகக்கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த அமெரிக்கா..!

9 ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டியில் ஆரன் ஜோன்சின் அசத்தலான அதிரடியில் உதவியுடன் கனடா அணியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது அமெரிக்கா.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தும் 9 ஆவது ரி20 உலகக்கிண்ண தொடர் இன்று மிகக் கோலாகலமாக ஆரம்பித்திருந்தது. இத் தொடரின் முதல் போட்டியாகவும், குழு ஏ இன் முதல் போட்டியாகவும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையில் டெல்லஸில் ஆர்மபித்திருந்தது.

இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணிக்கு ஆரம்ப வீரரான டவ்னீட் டலிவாள் 9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் அரைச் சதத்தை பதிந்து 61 ஓட்டங்களையும், மத்திய வரிசையில் வந்த நிக்கோலஸ் கிர்டன் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருக்க கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் 195 ஓட்டங்கள் என்ற மிகச் சவால் மிக்க வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த அமெரிக்கா அணிக்கு ஆரம்ப வீரரான டெய்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் மத்திய வரிசையில் வந்த அண்ரியஸ் கேஸ் மற்றும் ஆரன் ஜோன்ஸ் ஆகியோர் 3ஆவது விக்கெட்டில் இணைந்து கனடாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் தத்தமது அரைச்சதங்களை பதிவு செய்து 131ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருக்க அண்ரியல் ஹோஸ் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் தொடர்ந்து களத்திலிருந்து மிரட்டிய ஆரன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ஓட்டங்களை விளாச அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இப்போட்டியின் நாயகனாக ஆரன் ஜோன்ஸ் தெரிவானார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *