கிழக்கு மாகாண முஸ்லிங்களின் உரிமையில் கை வைத்தவர்கள் இப்போது கல்வியையும் சீரழிக்க முனைகிறார்கள் – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்
கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல தேசிய ரீதியாகவும் பிரபலமான திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சையின் பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. அந்த மாணவிகளின் வாழ்வோடு விளையாட முனையும் யாரையும் நாம் அனுமதிக்க முடியாது. மாணவிகளின் உயர்தர பரீட்சையின் பெறுபேற்றை உடனடியாக வெளியிட பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது கண்டன அறிக்கையில் மேலும், பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை இஸ்லாமிய மாணவிகள் மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து கவலைப்பட மட்டுமே முடிந்தது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை தொடர்பில் பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் மண்டபத்திலையே அதனை முடித்திருக்க முடியும்.
முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
பரீட்சை மண்டபத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளர் ஆளுமையற்ற கல்வி பரப்புக்கு பொருத்தமற்ற ஆசிரிய தொழிலை கேவலப்படுத்தும் மனநிலை கொண்ட ஒருவராகவே நான் பார்க்கிறேன். ஒரேமொழியை பேசும் சகோதர இன மாணவிகளின் உரிமைகளில் கை வைப்பது சகோதரத்துவத்துக்கு ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய மோசமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பரீட்சை ஆணையாளர் உடனடியாக மாணவர்களின் பெறுபேற்றை வெளியிட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல உரிமை சார்ந்த பிரச்சினையும் கூட. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.