9 மைதானங்கள், 20 அணிகள், 55 போட்டிகள், ஒரே சம்பியன். நாளை கோலாகளமாய் ஆரம்பிக்கும் 9ஆவது உலகக்கிண்ணம்.
கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்துக் காத்திருந்த 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர் நாளை மிகக் கோலாகளமாக ஆரம்பிக்கின்றது. ஆரம்பப் போட்டியில் போட்டிகளை நடாத்தும் அமெரிக்கா அணி கனடா அணியை டல்லஸ் மைதானத்தில் எதிர்கொள்கின்றது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நாளை ஆரம்பிக்கும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் முதல் முறை பங்கேற்கும் உலகக்கிண்ணத் தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன. மேலும் மேற்கிந்தியத் தீவுகயின் 6 மைதானங்களிலும், அமெரிக்காவின் 3 மைதானங்களிலுமாக மொத்தம் 9 மைதானங்களில் இத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ் உலகக்கிண்ணத் தொடர் 4 சுற்றுக்களைக் கொண்டதாக இடம்பெறவுள்ளது. முதல் சுற்று குழுநிலை லீக் ஆட்டங்களாகவும், 2ஆவது சுற்று சுப்பர் 8 லீக் ஆட்டங்களாகவும் இடம்பெறவுள்ளதுடன், 3ஆவது சுற்று விலகல் அரையிறுதிப் போட்டியாகவும், 4ஆவதும் இறுதியுமான சுற்று இறுதிப் போட்டியாகவும் இடம்பெறவுள்ளது.
முதல் சுற்று லீக் ஆட்டங்களுக்காக 20 அணிகளும் ஒரு குழுவில் 5 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குழு – ஏ: கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா
குழு – பி: அஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து
குழு – சி: ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகண்டா, மேற்கிந்திய தீவுகள்
குழு – டி: பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை
மேலும் முதல் சுற்று குழுநிலை லீக் ஆட்டங்கள் நாளை (2) ஆரம்பித்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பின்னர் 2ஆம் சுற்றான சுப்பர் 8 லீக் போட்டிகள் எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 3ஆம் சுற்றான விலகல் முறை அரையிறுதி ஆட்டம் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தீர்மானமிக்க இறுதிப் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாளை ஆரம்பிக்கும் முதல் போட்டி இலங்கை நேரப்படி காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் அமெரிக்கா அணி கனடா அணியை எதிர்த்தாடுகின்றது. பின்னர் போட்டிகளை நடாத்தும் மற்றைய நாடான மேற்கிந்தியத் தீவுகள் அணி நாளைய தினம் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ள தொடரின் 2ஆவது போட்டியில் முதல் முறை உலகக்கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்ற பபுவா நியூகினியா அணியை எதிர்கொள்கின்றது.
மேலும் 3ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி பலமிக்க தென்னாபிரிக்க அணியை நியூயோர்க் மைதானத்தில் எதிர்த்தாடவுள்ளதுஇ அத்துடன் இத் தொடரில் இடம்பெறவுள்ள போட்டிகள் இலங்கை நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு, காலை 6 மணிக்கு , இரவு 8 மணிக்கு, இரவு 10.30 மணிக்கு மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)