பேருவளை மாணவி பாத்திமா நிஹ்லா அகில இலங்கை ரீதியில் நான்காமிடம்..!
வெளியாகிய 2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் , பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசியப் பாடசாலை மாணவி K.F பாத்திமா நிஹ்லா உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் நான்காம்
இடமும் மாவட்ட ரீதியில் முதலிடமும் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய இம்மானவி அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெற்று 2.9986 என்ற Z புள்ளிகளையும் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
இவ்வாறு சாதனை படைத்த மாணவி பேருவளை பெலஸ்பாத் பகுதியை சேர்ந்த கம்சுல் பைஸர் மற்றும் ஃபாத்திமா ஹரீஸியா தம்பதிகளின் மகளாவார்.
இது பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் பாடசாலை வரலாற்றின் ஓர் சாதனை என்று பாடசாலை அதிபர் திரு எஸ்.ஐ குமார் அவர்கள் கூறியதோடு, இதற்காக உழைத்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் கல்வி நலன்விரும்பிகள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலையின் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவ மாணவிகள் சங்கம்,பெற்றோர்கள் ,நலம் விரும்பிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பாடசாலை அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த சாதனை புரிந்த மாணவி தெரிவிக்கையில்,
“முதலாவதாக நான் இந்த அடைவை அடைவதற்கு அருள் புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் அடுத்ததாக எனது முதுகெலும்பாக நின்று அனைத்து வகையிலும் எனக்கு உதவியாக இருந்த எனது பெற்றோருக்கும் இவ் இலக்கை நோக்கிய நேர் பாதையில் என்னை வழிநடத்திய Dharga town science project இல் கல்வி கற்பித்த எனது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மற்றும் எனக்கு பாடசாலை அதிபர் பட ஆசிரியர் குலாத்திக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று கூறினார்.
(பேருவளை : பீ.எம் முக்தார்)