தம்புள்ள தண்டர்ஸ் உரிமையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவிருந்த தம்புள்ளை தண்டர்ஸின் உரிமையாளர் தமீம் ரஹ்மானை எதிர்வரும் 2024 ஜூன் 07 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் ஆட்ட நிர்ணயம் தொடர்பாக பேசிய முழு தொலைபேசி உரையாடலையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜையான தமீம் ரஹ்மான்இ எல்.பி.எல் 2024க்கான வீரர்கள் ஏலத்தின் பின்னர் மே 22 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டருக்க நீதவான் அவரை மே 31 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
போட்டி ஆட்டநிர்ணயக் குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு அமைச்சகத்தில் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நடைபெற்ற எல்.பி.எல் 2024 இன் வீரர்கள் ஏலத்தில் தம்புள்ளை தண்டர்ஸ் 18 ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்புக் குழுவும் கலந்து கொண்டது.
5ஆவது எல்.பி.எல் போட்டிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கண்டியில் , தம்புள்ளையில் மற்றும் கொழும்பு மைதானங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.