உள்நாடு

சட்டத்தரணியாவதே எனது இலட்சியம்; புத்தளம் மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி M.F.F. ஹானிம்…!

இன்றைய தினம் வெளியான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், புத்தளம் தெற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் , புத்தளம் மாவட்டத்தில் கலைப்பிரிவில் (தமிழ் மொழி மூலம்) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் அரசியல் விஞ்ஞானம் , பொருளியல் மற்றும் தகவல் , தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடங்களிலும் முறையே “ஏ” சித்தியைப் பெற்றுக் கொண்டதுடன், 2.1417 இஸட் புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கற்பிட்டி – அக்கரைப்பற்று பிரதேச வரலாற்றில் முதற் தடவையாக கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி இவ்வாறு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

சிறுவயதிலிருந்தே ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்பது தனது இலட்சியம் எனவும் அந்த இலட்சியத்தை நோக்கிப் பயணித்ததாகவும் கலைப்பிரிவில் புத்தளம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம் தெரிவித்தார்.

மேலும் , கல்வி கற்பதற்காக அடிக்கடி ஊக்கப்படுத்தி , மேலதிக வகுப்புகள் உட்பட கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும் கொத்தாந்தீவு மு.ம.வி அதிபர் உட்பட கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, வரலாற்றுச் சாதனை புரிந்து மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், கொந்தாந்தீவு கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என அந்த பாடசாலையின் அதிபர் கே.ரி.ஹாறூன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவ – மாணவிகள் சங்கம், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக அமைப்புகள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

மாணவி முஹம்மட் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசிரியராக பணியாற்றும் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) மற்றும் கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் என். சித்தி நஸ்ரா ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

 

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *