எகிப்து தொடர்பில் ஹரீஸ் எம்.பியின் உரையின் எதிரொலியாக எகிப்து அதிருப்தி : இது தொடர்பில் பலஸ்தீன் தூதுவர் மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடிதம் !
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த மே 8 ஆம் திகதி பலஸ்தீன முஸ்லிங்களுக்கு ஆதரவாகவும், றபா பிரதேசத்தில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பிலும் கண்டித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு இடிவிழுந்து சாக வேண்டும் என்றும் வேதனையுடன் கூறியிருந்த அவர் “இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவையும் அந்நாட்டின் கொடுங்கோல் இராணுவத்தினையும் கட்டுப்படுத்த முடியாமல் இன்று பக்கத்தில் இருக்கின்ற எகிப்து ஜனாதிபதி சிசி நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். பலஸ்தீன மக்களை பலி கொடுப்பதற்காக ரபா எல்லைப் பிரதேசம் இஸ்ரேலிய இராணுவத்திற்காக திறந்து விடப்பட்டிருக்கின்றது” எனவும் பேசியிருந்தார்.
இந்த உரை தொடர்பில் எகிப்து அரச தலைவர்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை இப்போது ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் அமைந்துள்ள எகிப்து மற்றும் பலஸ்தீன தூதரகங்கள் ஊடாக சில நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது. எகிப்து தூதரகம் பலஸ்தீன தூதரகம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் உரை தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கொடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
பலஸ்தீன விடயத்தில் எகிப்து சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் தேவையான எல்லா வழிகளிலும் பல உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருவதாகவும் ஹரீஸ் எம்.பியின் இந்த உரையின் காரணமாக சர்வதேச மட்டத்தில் எகிப்தை பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவதாகவும் இதனால் பல்வேறு இக்கட்டான நிலைகள் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி எகிப்து பலஸ்தீனுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்துமாறும் தெரிவித்து இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் உரை சர்வதேச அளவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது புலனாகிறது. இலங்கை மக்களின் கவனம் காஸா மக்கள் மீதும், பலஸ்தீன விடுதலை மீதும் செல்ல இவ்வாறான உரைகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளதை தவிர்க்க முடியாது. இலங்கை முஸ்லிம்களின் அன்பை காஸா மக்கள் மீது கொண்டு சேர்த்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் உரை சர்வதேச அளவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
(நூருல் ஹுதா உமர்)