உள்நாடு

வடமேல் மாகாணத்தில் முதலீடு செய்வதில் இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம்..!

வடமேல் மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித்தொழிற்சாலைகளை நிறுவுவதில் இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி டீ.வெங்கடேஸ்வரன் தலைமையில் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் போர்ட்ரஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (30) வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமத் அவர்களைச் சந்தித்து , வடமேல் மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசனை ஒன்றை நடத்தினர்.
இதன்போது வடமேல் மாகாணத்தை இலங்கையின் கால்நடை உற்பத்தித் துறையின் மையப்புள்ளியாக மாற்றும் வகையிலான சகல வளங்களும் காணப்படுவதாகவும், முதலீட்டாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தெரிவித்தார்
தகவல் தொழில்நுட்பம், இயற்கை எரிவாயு உற்பத்தி ,ஹைட்ரஜன் வாயு உற்பத்தி போன்றவற்றை மேற்கொள்ளும் வகையிலான பாரிய தொழிற்சாலைகளை வடமேல் மாகாணத்தில் நிறுவுவதற்கான விருப்பத்தை வெளியிட்ட இந்திய முதலீட்டாளர்கள், அதற்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கௌரவ ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்தனர்
அதேபோன்று எதிர்வரும் ஜூன் 19ம் திகதி சுமார் 70க்கும் குறையாத இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்றை அழைத்து வந்து, வடமேல் மாகாண முதலீடுகள் குறித்து ஆய்வொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்
இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டீ. வெங்கடேஸ்வரன், வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

(இக்பால் அலி)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *