இந்தியாவில் கைதான நால்வரும் கொழும்பில் சத்தியப்பிரமாணம்..! இன்றைய திவய்ன தலைப்பு செய்தி..!
இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் முன் கொழும்பில் இரகசிய இடமொன்றில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நால்வரும் மாளிகாவத்தை பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹாரான் உள்ளிட்ட பயங்கரவாதிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு சமமானது என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களின் கைத்தொலைபேசிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இந்திய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதனை இலங்கை பொலிஸாருக்கு வழங்க இந்திய பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த ரகசிய இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இடத்தில், தீவிரவாத மத நூல்கள் அடங்கிய பேனர் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் பயங்கரவாதிகள் தொடர்புடைய பேனரை எரித்ததை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு எரிக்கப்பட்ட பேனரின் பாகங்கள் அரச பரிசோதகரால் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவேறு நாட்களில் சந்தேகநபர்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு நாட்கள் புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இரண்டாம் நாள் சத்தியப் பிரமாணத்தின் போது பிரசன்னமாகியிருந்தமை அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக இந்தியாவின் சிறப்பு பாதுகாப்பு படையினர் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த 20ஆம் திகதி அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.