உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பரில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு..!

சாய்ந்தமருது எம். எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டினார்.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஐ.எஸ்.ஏ. ராசிக் கலந்து கொண்டார்.
நிகழ்வை நெறிப்படுத்தி நடாத்திய பாடசாலையின் ஒழுக்காற்று சபையினர் மற்றும் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளுக்கும் இதன் போது அதிபர் நன்றி தெரிவித்தார்.
சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தில் ஒழுக்க நெறியை பேணுவதற்கான  ஏற்பாட்டின் மைல் கல்லாக இது கருதப்படுகின்றது. இந்தப் பிதேசத்தில் ஒழுக்க விழுமியங்கள் இல்லாவிட்டால் பாடசாலையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை திறன் படக்கொண்டு செல்ல முடியாது. இதன் காரணமாக இப்ப பாடசாலையை மட்டுமல்ல, இப்பிரதேசத்தையும் நாம் பாதுகாக்க முடியாது.  ஒழுக்க விழுமியங்களைப் பேண வேண்டுமென்றால் முதலில் வீட்டில், வீதியில், சூழலில், சுற்றாடலில் போன்ற எல்லா இடங்களிலும் ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட வேண்டும். அவ்வாறு பேணப்படும் பொழுதுதான் மாணவர்கள் ஒழுங்காகக் கல்வியைக் கற்றுக் கொள்ள முடியும் என்ற வகையில் அதிதிகள் இதன்போது சிறப்புரையாற்றினர்.
எதிர்வரும் காலங்களில் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த பாடசாலையாக இந்தப் பாடசாலை மிளிரும் என்றும் இந்த ஊரும் உலகமும் போற்றக்கூடிய பாடசாலையாக இப் பாடசாலை மாற வேண்டும் என்றும் பிரதம அதிதி டாக்டர் சனூஸ் காரியப்பர் மாணவர்களை வேண்டிக்கொண்டார்.
குறுகிய காலத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் மிகவும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சபையோர் உட்பட அதிதிகள் நிகழ்வை போற்றிப் புகழ்ந்தனர்.
இவ்விழாவின் போது மாணவ மாணவியர்களின் சின்னம் சூட்டு வைபகமும் பதவி ஏற்பும் இடம்பெற்றதோடு, வகுப்பு தலைவர்களுக்கான சின்னங்களும் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி அட்டையும்  வகுப்பு மாணவத் தலைவர்களுக்கு  வழங்கப்பட்டன.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *