சவுதி மன்னரின் விஷேட திட்டம்: 2322 பேருக்கு இம்முறை இலவச ஹஜ் வாய்ப்பு
சவுதி அரேபியாவிலுள்ள இரு புனித ஹரம் ஷரீபின் காவலர்களான சவுதி அரேபிய மன்னர்கள், அவர்களது தனிப்பட்ட செலவில் உலகமெங்குமிருந்தும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஏழைகள், அகதிகள் என ஆயிரக்கணக்கானோர் வருடா வருடம் இலவசமாக ஹஜ், உம்ரா கடமையை நிறைவேற்ற ஏற்பாடு செய்து கொடுப்பது வழமையாகும். அன்று தொட்டு இன்று வரையும் இந்த முறைமை நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னரும் இரு புனித ஹரம் ஷரீபின் காவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் தனது சொந்த செலவில் இம்முறை 2322 பேர் புனித ஹஜ் கடமையை இலவசமாக நிறைவேற்ற ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இவர்கள் இலங்கை உட்பட உலகின் 88 நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது ஹஜ், உம்ராவுக்கான அனைத்து செலவுகளும் மன்னரின் விஷேட விருந்தினர் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியா மேற்கொள்கிறது.
புனித ஹஜ், உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா, மதீனாவுக்கு சென்று வர பெருந்தொகை நிதிச் செலவு ஏற்படும். அத்தனை செலவுகளையும் பொறுப்பெடுத்து மேற்கொள்வதென்பது இலகுவான காரியமல்ல. அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை நாடியவர்களால் மாத்திரம் தான் இப்படிப்பட்ட அளப்பரிய சேவையைச் செய்ய முடியும். அந்த வகையில் சவுதி அரேபிய மன்னர் இப்பணியை முன்னெடுக்கிறார்.
சவுதி அரேபிய மன்னரின் விஷேட விருந்தினர் திட்டத்தின் கீழ் ஹஜ், உம்ரா கடமையை நிறைவேற்றவென பலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வருடாவருடம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக பலஸ்தீனர்களில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இலவசமாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைக்கப்படுகின்றனர்.
அந்த அடிப்படையில் இவ்வருடமும் பலஸ்தீனில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வாய்ப்பளித்துள்ளார். சவுதி மன்னர் மேற்கொண்டுவரும் அளப்பரிய சேவைகளில் இதுவும் ஒன்றாகும். . இந்த உயரிய சேவையை உலக முஸ்லிம்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
இதேவேளை மன்னரின் விஷேட விருந்தினர் திட்டத்தின் கீழ் ஹஜ், உம்ராவை நிறைவேற்ற புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள், அகதிகள், ஏழைகள் போன்றோருக்கு வாய்ப்பளிக்கும் முறையை சவுதி அரேபியா, கடந்த 26 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 60 ஆயிரம் பேர் ஹஜ், உம்ரா கடமையை முற்றிலும் இலவசமாக நிறைவேற்றியுள்ளனர். இத்திட்டத்தின் ஊடாக இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பயனடைந்துள்ளனர்.
அந்த வகையில் இவ்வருடம் அல்லாஹ்வின் அருளாலும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியின் அயராத முயற்சியாலும் இலங்கையில் இருந்தும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலர் மன்னரின் விஷேட விருந்தினர் திட்டத்தின் கீழ் ஹஜ், உம்ரா கடமையை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இப்பாரிய சேவையை முன்னெடுத்து வருகின்ற சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸையும், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானையும், இலங்கைக்கான தூதுவரையும் ஆகியோரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்ளவும் அவர்களுக்கு நல்லாரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அளித்திடவும் இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கிறேன்.