உலகம்

மனிதாபிமானமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலின் கொடூரம்..!

இன்று பாலஸ்தீனில் பச்சிளம் பாலகர்கள் உட்பட கொத்து கொத்தாக அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அகதிகள் முகாம் ஒன்றில் ஒரே நேரத்தில் 65 அப்பாவி உயிர்கள் காவு கொல்லப்பட்டிருக்கின்றன.இது தினந்தோறும் இடம்பெறும் சோக நிழ்வாக வாழ்க வரலாற்றில் கரும்புள்ளியைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன என்று பேருவளை மருதானையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தும் போதே பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மேற்கண்டவாறு தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “இன்று உலகில் எங்கும்,எவராலும் இழைக்கப்படாத மாபெரும் கொடுமைகள் இஸ்ரேலால் பலஸ்தீனுக்கு திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மனிதாபிமானமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,பள்ளிவாசல்கள்,அகதி முகாம்கள்,மக்கள் குடியிருப்புகள் என்றெல்லாம் தினந்தோறும் குண்டு மழை பொழியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பலஸ்தீன காஸாவை லேசாக கபனீகரம் செய்ய காட்டு தர்பார் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன சொந்த மண்ணிலே காலூன்ற முடியா வண்ணம் பலஸ்தீனத்தை மண்மூடி மறைக்கப்பார்க்கும் இஸ்ரேல் விரைவில் மண் கவ்வும் காலம் வெகு தூரத்தில் இருக்காது.

உலகில் சமாதானத்தை நிலை நாட்ட வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையையும் இஸ்ரேலை தடவிக் கொடுக்கும் வல்லரசு வள்ளுருகள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நீதி,நியாயம் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலின் அராஜகத்தை உலகின் தாராளமான நாடுகள் கண்டித்த வண்ணம் இருக்கின்றன. ஐரோப்பிய சம்மேளன நாடுகளும் தம் கண்டனக் கனைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன. அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இஸ்ரேல் தன் பேரழிவை பலஸ்தீனுக்கு இழைத்துக் கொண்டிருக்கிறது.

இதிலும் கவலை என்னவென்றால் எமது இலங்கை நாடு பெரும் இரட்டை வேடத்திலும் கேவலமான முறையில் இஸ்ரேலின் அராஜகத்தை கண்டித்து குரல் எழுப்பாமல் இருக்கிறது.இதிலும் மேலும் கேவலம் என்னவென்றால் இஸ்ரேலுடன் தேனிலவு நடத்திக் கொண்டிருக்கிறது. எமது வாலிபர்களை அங்கு வேலைக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது. இது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செலவாகும். அல்லது எரியும் நெருப்பில் சுருட்டு பற்ற வைக்கும் கபட நாடகமாகவே கருத வேண்டியுள்ளது.

ரஷ்யா உக்ரேன் போர்க்களத்துக்கு எமது ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை பணிக்கு அனுப்பி அதனால் ஏற்பட்ட உயிர் பலியான விபரீத விளைவுகள் பற்றி அண்மையில் பாராளுமன்றத்தில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் பிரஸ்தாபித்ததை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.எனவே எமது அரசு, உலகில் நீதி, நியாயம் நிலைநாட்டப்பட இஸ்ரேலின் காட்டு தர்பாரை நிறுத்தும் படி எமது நாட்டு சார்பாக தெரிவிக்க எமது மக்கள் அரசை கோர வேண்டும்.” என்றார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *