Uncategorized

புத்தளம் கூட்டமைப்பில் இணையும்படி தேசிய மக்கள் சக்திக்கு தூய தேசத்திற்கான இயக்கம் அழைப்பு

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் முனீர் முலப்பர் ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று கத்தார் ஷெரட்டோனில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிட்ட தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார், ”இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கின்ற உறவுகள் பற்றி பேசப்பட்டதோடு, எதிர்காலத்தில் புத்தளம் மாவட்ட அரசியலுக்குள் எவ்வாறு பயணிப்பது பற்றியும் குறிப்பாக வரப்போகின்ற பாராளுமன்ற தேர்தலில் பொது கூட்டமைப்பு ஒன்றினால் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மிகத் தெளிவாக முன் வைத்தேன்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி மிக வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்றும், பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் தமது கட்சி தனித்து களம் இறங்குவதற்கான ஏற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் முனீர் முலப்பர் என்னிடம் தெரிவித்தார்.

அத்தோடு கலந்துரையாடலின் இறுதிப் பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற சமய, சமூக, சிவில் தலைமைகளால் பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட இருக்கின்ற பொதுக் கூட்டமைப்பிலே தேசிய மக்கள் சக்தி இணைய வேண்டும் என்ற உத்தியோகபூர்வ வேண்டுகோளினை நான் உத்தியோகபூர்வமாக முனீர் முலப்பரிடம் எழுத்து மூலமாக சமர்ப்பித்தேன்.

மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க போட்டியிட்ட திசை காட்டி சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சமூக ஊடகத்தில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவராகிய நானே அக்காலப் பகுதியில் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.” எனக் குறிப்பிட்டார் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *