விளையாட்டு

கற்பிட்டி கோட்ட மட்ட வொலிபோல் தொடர். சம்பியன் மகுடங்களை அள்ளிச் சுருட்டிய பள்ளிவாசல்துறை மு.ம.வித்தியாலயம்

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட வொலிபோல் போட்டித் தொடரில் பள்ளிவாசல்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அணி சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.

பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் புத்தளம் வலயத்திற்குற்பட்ட கல்பிட்டிக் கோட்டக் கல்விப் பணிமனையின் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வொலிபோல் போட்டி நேற்று (28) ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஐ.எம். பலீல் தலைமையில் நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் சுமார் 20 பாடசாலைகள் பங்கேற்றிருந்தது.

அதற்கமைய 16 வயதுக்குற்பட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணியும், திகழி முஸ்லிம் வித்தியாலய அணியும் மோதின. மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்விறுதிப் போட்டியில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி 25:19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று 1:0 என முன்னிலை பெற்றது.

பின்னர் இடம்பெற்ற 2ஆவது செட்டில் சற்று சுதாகரித்துக் கொண்ட திகழி முஸ்லிம் மகா வித்தியாலய அணி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணிக்கு சிறந்த போட்டியைக் கொடுத்த போதிலும் பலமிக்க பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி 25:23 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொள்ள விறுவிறுப்பான இறுதிப் போட்டி 25:19 மற்றும் 25:23 என்ற நேர் செட்களில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வசமானதுடன் நடப்பாண்டின் சம்பியன் கிண்ணமும் அவர்கள் வசமாகிப்போனது. அதற்கமைய திகழி முஸ்லிம் வித்தியாலய அணி 2ஆம் இடத்தினைப் பெற்றுக் கொள்ளஇ அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 3ஆம் இடத்திற்குத் தெரிவானது.

அத்துடன் முன்னர் நிறைவு பெற்ற 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட போட்டிகளிலும் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி சம்பியன் பட்டத்தினை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இம்மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் ஏ.எச்.எம்.ரஜப்தீன், பயிற்றுவிப்பாளர் எம்.என்.எம். சராப், கே.ஏ.பீ.எஸ். சஞ்சீவ மற்றும் பாடசாலை அதிபர் உட்பட பாடசாலை நிருவாகத்தினருக்கு பாடசாலை சமூகம் நன்றியைத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *