பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான விடயம்..! –பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்
காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நேற்று (மே 28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட அரச உயர் அதிகாரிகளுடன் அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாடுகள் தொடர்பில் தனித்தனியாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேற்படி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் அவசரகால சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்வதற்கான முறையான செயல் திட்டங்களை தயாரித்தல், அனர்த்த மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் மாவட்ட குழுக்களை புதுப்பித்து செயல்படுத்தல் போன்ற விடயங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
‘சுரகிமு’ நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாட்டிலுள்ள 10126 பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கம் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் தீவிர பங்களிப்புடன் உரிய பாடசாலை அதிபர்களின் கீழ் விஷேட பாடசாலைக் குழுக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னகோன் இதன்போது மேலும் தெரிவித்தார்.
மேலும், பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னெச்சரிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அடிப்படை முதலுதவி பயிற்சி அளிப்பதுடன், பாடசாலைகளில் முறையான முதலுதவி பெட்டிகள் கிடைப்பதை உறுதிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது சுரக்கிமு திட்டம் உட்பட செயலில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் குறிப்பாக அவசரகால சூழ்நிலைகளின் போது பாடசாலை மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், குறித்த திட்டங்கள் தொடர்பாக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவது குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவசரகால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் சில சட்ட ரீதியான சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான தீர்வுகளை எடுப்பதற்கு பல அமைச்சுகளுடன் ஆலோசனைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.