“MAYBE THEY WON’T” நாவல் வெளியீடு இன்று
“MAYBE THEY WON’T” என்கின்ற ஆங்கில நாவல் இன்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பு BMICH தியூலிப் மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளர் ஏ.ஆர்.வி.லோஷன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ். என்.எம்.அமீன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் அல்ஹாஜ். லத்தீப் பாறூக் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்
இந்நாவலுக்கான பிரதான மீளாய்வு உரையினை கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்காரும், நூல் மதிப்பீட்டினை புத்தளம் வலயக் கல்விப்பணிமனையின் ஆங்கில ஆசிரிய ஆலோசகர் திருமதி பாத்திமா ரிஸ்கியாவும், ஊடகவியலார் அப்துல் ரஸ்ஸாக் உடையாரும் நிகழ்த்தவுள்ளனர்.
பதின்மவயது இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் நிலவுகின்ற உறவுகள், அதனடியாக எழுகின்ற உணர்வலைகள், எண்ணங்கள், பார்வைகள், முரண்பாடுகள் அவற்றைப் பெற்றோரும் சமூகமும் அர்த்தப்படுத்தும் முறைமைகள் என இதுவரை பேசுபொருளாக அல்லாத ஆனால் நமது சமூகத்தில் உறைந்துகிடக்கின்ற ஒரு கருவை மையமாகக்கொண்டு புனையப்பட்ட இந்த நாவலின் முதலாவது பதிப்பின் வெளியீடே அன்றையதினம் இடம்பெறவுள்ளது
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி மாணவனும், அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சசைக்குத் தோற்றியவருமான செல்வன் அப்துல்லாஹ் அஸ்மின் மேற்படி நாவலைப் புனைந்திருக்கின்றார்.
முன்னாள் விமானப்படை அதிகாரி முஹம்மது ஷிபா தலைமையில் இடம்பெறவிருக்கின்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் செல்வன் அப்துல்லாஹ்வின் ஆசிரியர்கள், மற்றும் அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கௌரவிக்கப்படவிருக்கின்றார்கள்.