ஏறாவூர் வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூட சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்; – முன்னாள் அமைச்சர் சுபைரிடம் பிராந்திய பணிப்பாளர் உறுதியளிப்பு
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டுள்ள A/C பழுதடைந்துள்ளமையினால் அந்த ஆய்வுகூடத்தினால் முழுமையான சேவைகளை வழங்க முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குறித்த பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து ஓரிரு நாட்களில் அப்பிரச்சினையை தீர்த்து ஆய்வு கூடத்தின் சேவைகளை வழமை போன்று மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஏறாவூர் உள்ளிட்ட அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு பாரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம் இங்குள்ள மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வு கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள A/C பழுதடைந்துள்ளமையினால் அந்த ஆய்வுகூடத்தில் உள்ள Bio Chemistry Analyzer உள்ளிட்ட ஏனைய சில குருதிப் பரிசோதனை இயந்திரங்களும் தொழிற்பட முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மாத்திரமே குறித்த ஆய்வுகூடம் மேற்கொண்டு வருகிறது.
இதனால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த ஏறாவூர் பிரதேச மக்கள் குறித்த பிரச்சினையை கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைரின் கவத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து விரைந்து செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மட்டக்கப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆர்.முரளீஸ்வரனை சந்தித்து வைத்தியசாலை ஆய்வுகூடத்தின் தற்போதைய நிலைமைகளை விளக்கியதுடன் மக்களின் நலன்கருதி குறித்த பிரச்சினையை உடன் தீர்க்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பிராந்திய பணிப்பாளர் ஓரிரு நாட்களில் அப்பிரச்சினையினை தீர்த்து ஆய்வுகூடத்தின் சேவை வழமைக்கு திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், புதிதாக வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினை அமைத்தல், வைத்தியசாலை அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் சுபைருடன் கலந்துரையாடினார்.
(உமர் அறபாத் – ஏறாவூர் )