“அஷ்ரபை பண்டப்பொருளாக்கும் அரசியலை ஹரீஸ் கைவிட வேண்டும். தலைவரின் சிந்தனைகளை புதைகுழியில் அமிழ்த்தக் கூடாது” – அசாத் சாலி
அரசியல் பிழைப்புக்காக பெருந்தலைவர் அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி.கைவிட வேண்டுமென, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஹரீஸ் எம்.பி. எடுக்கும் முயற்சிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளதாவது:
“ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் ஆளுமைகள் காலத்தால் அழியாதவை. அவரது சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தின் விலைமதிக்க முடியாத சொத்தாக மதிக்கப்படுகின்றன. அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர், அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் எவரும் அவரது அடியொட்டி அரசியல் செய்யவில்லை. இதனால், புதைகுழியில் மூழ்கும் நிலைக்கு சமூக அரசியல் சென்றுள்ளது. இவ்வாறு இறுதி மூச்சைவிடும் அரசியல்வாதிகளில் ஒருவராகவே ஹரீஸ் உள்ளார்.
இது தேர்தல் காலம் என்பதால், தலைவர் அஷ்ரபின் பெயரை ஞாபகமூட்டி, இழந்த மவுசை உயர்த்தும் முயற்சியில் ஹரீஸ் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் நிதி கோரி உள்ளமை இதனையே புலப்படுத்துகிறது.
ரணிலுக்கு தலையைக் காட்டி, சஜிதுக்கு முதுகைக் காட்டி மற்றும் ஹக்கீமுக்கு ஊரைக்காட்டி அரசியல் செய்யும் இவரால் எதைச் சாதிக்க முடிந்தது? தலைமைக்கு விசுவாசம் இல்லாத ஹரீஸ் சமூகத்தை நேசிப்பார் அல்லது சொந்த ஊரை வாழ வைப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இவரது எண்ணமெல்லாம் அஷ்ரபின் பெயரை விற்று எம்.பியாவது மாத்திரமே.
இந்த 24 வருட இடைவெளியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரபுக்காக எதைச் செய்தது? அதிகாரத்தில் இருந்த காலங்களிலாவது பெருந்தலைவரின் மரணம் குறித்து உறுதியான முடிவைப் பெற முடிந்ததா? ஆகக் குறைந்தது தலைவரதும் அவரதும் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முகத்தோற்றமுமாக உள்ள ஊரான கல்முனைக்காவது இவரால் எதையும் செய்ய இயலவில்லை. ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது ஊர்களையாவது அபிவிருத்தி செய்து உருப்படவைத்துள்ளனர். கல்முனையில் ஒரு சந்தைக்கட்டடம் இல்லை. மாநகர சபைக்கு முறையான அமைவிடம் இல்லை. உடைந்துகிடக்கும் வாசிகசாலையை கட்டவக்கில்லை. சாய்ந்தமருது மக்களை இணைத்துச் செல்லும் திட்டம் துளியளவும் இல்லை. இந்த இயலாமைகளை மறைப்பதற்கே, கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைக்க முயல்கிறார்.
தலைவரின் குடும்பத்தினர்கூட இதை விரும்பவில்லை. அமான் அஷ்ரப் அவரது டுவிட்டரில் இதை வன்மையாக எதிர்த்துள்ளார். விவசாய ஆய்வுகூடம், மீன்களைப் பதனிடும் தொழிற்சாலை அல்லது ஒலுவில் துறைமுகப் பிரச்சினை இதுபோன்று உருப்படியாகச் சிந்திக்காமல், அஷ்ரபின் பெயரை சில்லறை வியாபாரமாக மாற்றுவதற்கு ஹரீஸுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லிம் சமூக எழுச்சி குறித்து சிந்தித்த தலைவர் அஷ்ரபை, அருங்காட்சியகத்துக்குள் அடைத்துவைக்க முடியாது” என்றும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.