முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக ரூமி ஹாஷிம் பவுண்டேசன் மேற்கொள்ளும் பணி மகத்தானதாகும்
விஞ்ஞான கல்வி செயற்திட்டத்தினூடாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக ரூமி ஹாஷிம் பவுண்டேசன் மேற்கொள்ளும் பணி மகத்தானதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் கூறினார்.
தர்கா நகர் இஷாஅத்துல் இஸ்லாம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டில் கா.பொ.த.உயர்தர உயர் வகுப்பு விஞ்ஞான பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களை தர்கா நகர் விஞ்ஞான கல்விப் பிரிவில் இணைத்துக்கொள்வது தொடர்பாக பெற்றோர்-மாணவர்களுக்கான விசேட கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேற்படி விஞ்ஞான கல்வி பிரிவு ஸ்தாபகரும் ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் தலைவருமான டொக்டர் ரூமி ஹாஷிம்,செயலாளர் எம்.ஜெஸூக் அஹமட்,இணைப்பாளர் ரபீஸ் ஹம்ஸா, தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க தலைவர் ஏ.பி.எம்.ஸுஹைர் ஹாஜியார்,அல்-ஹம்ரா அதிபர் பஸ்லியா,முன்னாள் எம்.இஸட்.எம்.நயீம்,ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ரீ.எம்.ஸபா உட்பட விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர்கள்,அரசியல்வாதிகள்,முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கு பற்றினர்.
முன்னாள் எம்.பி. அஸ்லம் ஹாஜியார் மேலும் கூறியதாவது தர்கா நகரினதும் களுத்துறை மாவட்டம் முஸ்லிம் களினதும் மட்டுமல்லாது நாட்டு முஸ்லிம் மக்களின் விஞ்ஞான கல்வி முன்னேற்றத்திற்காக காலத்தையும்,நேரத்தையும்,பணத்தையும் செலவு செய்யும் டொக்டர் ரூமி ஹாசிமை சமூகம் பாராட்ட வேண்டும். 1915 ஆம் ஆண்டு ஸப்வான் ஆசிரியரினால் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வி செயற்திட்டத்தை டொக்டர் ரூமி ஹாசிம் பொறுப்பேற்று வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார் 6 – 7 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தில் இன்று 100 மாணவர்கள் இணைந்துள்ளனர்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் நன்றாக கல்வி கற்று வைத்தியராக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்பு இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.பிள்ளைகளின் மேலஅதிக வகுப்புகளுக்காக பெற்றோர்கள் பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப்படி பெரும் தொகை பணத்தை செலவிடுவது கஷ்டமான காரியம் ஆகும்.விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் ஒரு செயற் திட்டத்தை தொடங்கியுள்ளமைய்யானது மாணவர்களுக்கு கிடைத்துள்ள ஓர் அதிஷ்டமாகும்.
தர்கா நகர் ஒரு யுகத்தில் கல்வியில் கொடிகட்டி பறந்த பிரதேசமாகும். மீண்டும் அந்த நிலை உருவாக வேண்டும். பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த விஞ்ஞான செயல்திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
ரூமி ஹாஷிமின் பெற்றோர்கள் கல்விக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள். ஆசிரியர்களாக இருந்து தியாகத்துடன் கடமையாற்றினர். இன்று அவரது புதல்வர் ரூமி ஹாஷிம் கல்விக்காக தமது செல்வத்தை வாரி செலவு செய்கிறார் என்றார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)