உள்நாடு

தொடரும் அசாதாரண நிலை; புத்தளம் மாவட்டத்தில் 8006 பேர் பாதிப்பு – 4 பேர் உயிரிழப்பு…!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில்
நேற்று (25) வரையிலான காலப்பகுதியில் 15 பிரதேச செயலகப் பிரிவில் 146 கிராம சேவகர் பிரிவில் 2429 குடும்பங்களை சேர்ந்த 8006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, கற்பிட்டி , நவகத்தேகம, பல்லம, நாத்தான்டிய, தங்கொட்டுவ, வென்னப்பு, மஹாவெவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 22 கிராம சேவகர் பிரிவில் 750 குடும்பங்களைச் சேர்ந்த 2676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறினார்.

அத்துடன், வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், முந்தல் பிரதேச செயலக பிரிவிக்குற்பட்ட 6 கிராம சேவகர் பிரிவில் 27 குடும்பங்களை சேர்ந்த 90 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 24 பேரும், சிலாபம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவில் 149 குடும்பங்களை சேர்ந்த 585 பேரும், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவில் 557 குடும்பங்களை சேர்ந்த 1687 பேரும், மாதம்பை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவில் 315 குடும்பங்களை சேர்ந்த 1001 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 45 பேரும், மஹாவெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவில் 520 குடும்பங்களை சேர்ந்த 1573 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 13 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு , நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவில் 50 குடும்பங்களை சேர்ந்த 159 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவில் 11 குடும்பங்களை சேர்ந்த 50 பேரும், பல்லம பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மஹாவெ பிரதேச செயகத்திற்குட்பட்ட பகுதியில் ஒரு பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டுளலளதுடன், அங்கு 57 குடும்பங்களை 197 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதுகாப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சமைத்த உணவுகள் உள்ளிட்ட தேவையான உதவிகளை அந்த பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அசாதாரண நிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாதம்பை, முந்தல், ஆராச்சிக்கட்டுவ மற்றும் நாத்தாண்டிய பிரதேசத்தில் தலா ஒவ்வொரு மரணம் பதிவாகியுள்ளது.

மேலும், 95 வீடுகளும், 17 வர்த்தக நிலையங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் – சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையின் கட்டிடத்தின் மீது பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் அந்தக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டிடத்தின் மீது வீழ்ந்த மரத்தை வெட்டியகற்ற தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *