9ஆவது ரி20 உலகக்கிண்ணம். முதல் ரி20 உலக்கிண்ண சம்பியன் மகுடத்தை தனதாக்கியது இந்தியா.
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்க இன்னும் 8 நாட்களே உள்ளநிலையில் உங்கள் உதயம் இணையத்தளத்தில் ரி20 உலகக்கிண்ணத் தொடர் தொடர்பான தொடர் கட்டுரைகள் பிரசுரமாகிவருகின்றது. அந்தவகையில் முதல் அத்தியாயத்தில் ரி20 இன் பிரசவம் தொடர்பில் பார்த்திருந்தோம். பின்னர் நேற்றைய தினம் அத்தியாயம் 2இல் ரி20 போட்டிகளை ஐசிசி அனுமதித்து சர்வதேச அந்தஸ்துடன் இடம்பெற்ற முதல் ரி20 போட்டி தொடர்பில் பார்திருந்தோம்.
அந்தவகையில் இன்றை தினம் அத்தியாயம் 3இல் நாம் கீழுள்ள தலைப்பு தொடர்பில் கவனம் செலுத்துவோம்.
முதல் ரி20 உலகக்கிண்ணத் தொடர்
சர்வதேச கிரிக்கெட் பேரவை ரி20 போட்டிகளை 2005ஆம் ஆண்டு அனுமதித்துடன் சர்வதேச அங்கீகாராத்தையும் வழங்கியிருந்தது. பின்னர் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரைப் போன்று ரி20 உலகக்கிண்ணத் தொடரை நடாத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை முயற்சியினை மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டு அது வெற்றியடைந்தது.
அதற்கமைய முதல் ரி20 உலகக்கிண்ணம் தென்னாபிரிக்காவில் நடாத்த ஏற்பாகள் செய்யப்பட்டது. இத் தொடரில் 12 அணிகளே இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தன. அதிலும் தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் இருந்த அணிகளுடன், தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெற்ற 2 அணிகளுடன் மொத்தமாக 12 அணிகள் தெரிவாகின. அவுஸ்திரேலியளா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாவே மற்றும் இலங்கை அணியுடன் தகுதிகான் போட்டிகளில் வெற்றி பெற்ற கென்யா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளே இத் தொடரில் பங்கேற்றன.
முதல் சுற்று
இத் தொடரில் பங்கேற்ற 12 அணிகளும் ஒரு குழுவில் 3 அணிகள் வீதம் 4 குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று இடம்பெற்றது. இதில் குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பெரும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகும் வகையில் போட்டி அட்டவணை அமையப்பெற்றிருந்தது. இம் முதல் சுற்றில் பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் குழு டீ இல் இடம்பெற்றதுடன் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலை பெற்றதுடன் போல்ட் அவுட் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டமை இத் தொடரை இன்னும் சுவாரஷ்யமாக்கியது.
மேலும் இலங்கை அணி குழு சீ இல் இடம்பெற்று தமது குழுவிலிருந்த நியூஸிலாந்து மற்றும் கென்யா அணிகளை வீழ்த்தி முதல் நிலை பெற்றது.
2ஆம் சுற்றான சுப்பர் 8 சுற்று
தத்தமது குழுக்கலின் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் இந்த சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றன. அதற்கமைய இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் போட்டிகளை நடாத்தும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளே இச்சுற்றுக்குத் தகுதி பெற்றன.
பின்னர் இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றில் ஒரு குழுவில் 4 அணிகள் வீதம் இரு குழுக்கலாகப் பரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. இதில் குழு ஈ இல் இந்தியா, நியூpலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளும், குழு எப் இல் இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் இடம்பெற்றன.
இந்த சுப்பர் 8 சுற்றில் குழு ஈ இல் இந்தியா, நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 3 அணிகளும் இரு வெற்றிகளைப் பதிவு செய்ய ஓட்ட சராசரிப் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் இக் குழுவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
மேலும் குழு எப் இல் இடம்பெற்ற போட்டிகளில் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் அவுஸ்திரேலிய அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொண்டமையால் பாகிஸ்தான் அணியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இச் சுற்றில் 3 இல் ஒரு வெற்றியையும், 2 தோல்விகளையும் சந்தித்த இலங்கை அணி தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.
அரையிறுதிப் போட்டிகள்
இத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 144 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி வெறும் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 18.5ஓவர்களில் 147 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் முதல் அணியாய் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
பின்னர் இடம்பெற்ற இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி இலக்காக நிர்ணயித்த 189 ஓட்டங்களை விரட்டிய அவுஸ்திரேலிய அணியால் வெறும் 173 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள 15 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தனது வரவை உறுதிப்படுத்தியது.
விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாத இறுதிப் போட்டி
முதல் ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஜொகனஸ்பேர்க் மைதானத்தில் 2007 செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெற்றது. இப்போட்டியைக் காண 32217 ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கௌதம் காம்பீரின் அசத்தலான 75 ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவிச்சில் உமர் குல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலளித்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதல் விக்கெட்டுக்கள் வீழ்ந்தவண்ணம் இருக்க அணியின் தலைவரான மிஸ்பா உல் ஹக் மாத்திரம் நிலைத்திருந்து அதிரடி காட்டி போட்டியை தம் பக்கம் இலுத்துச் சென்ற போதிலும் 4 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் தேவையாக இருக்க ஸ்கூப் அடியினை மிஸ்பா அடிக்க அதனை ஸ்ரீகாந்த் லாபகமாகப் பிடியெடுக்க பாகிஸ்தான் அணியின் சம்பியன் கனவு கலைந்ததுடன் அவ் அணியால் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களையே பெறமுடிந்தது. மிஸ்பா 44 ஓட்டங்களைப் பெற்றார்.
இதனால் வெறும் 5 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் முதல் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி வரலாறு படைத்தது.
இத் தொடரில் சாதித்த வீரர்கள்.
- முதல் உலகக்கிண்ணத் தொடரின் தொடர் ஆட்டநாயகன் விருது : பாகிஸ்தானி சஹீட் அப்ரீடி
- இவ் உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்: அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹெய்டன் (265 ஓட்டங்கள்)
- இவ் உலகக்கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் : பாகிஸ்தானி உமர் குல் (13 விக்கெட்டுக்கள்)
- ஒரு ஓவரின் ஆறு பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களை விளாசியிருந்தார் இந்தியாவின் யுவராஜ் சிங். இங்கிலாந்து வீரரான ஸ்டுவொட் ப்ராட்டிற்கு எதிராக.
- பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ ரி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் ஹெட்ரிக் சாதனையை பதிவு செய்தார்.
( தொடரும்…)
(அரபர் பஹர்தீன்)