ஈரான் ஜனாதிபதி மர்ஹூம் ரைசியின் திடீர் மறைவு வேதனையளிக்கிறது – கணமூலை ஜனாஸா நலன்புரி அமைப்பு அனுதாபம்…!
ஈரான் எல்லையிலுள்ள அஷர்பைஜான் நாட்டிற்கு பயணித்த அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட வெளியுறவு அமைச்சர் ஹொசெயின் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு மதுரங்குளி – கணமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி அமைப்பு அனுதாபத்தை வெளயிட்டுள்ளது.
இதுதொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் சமாதான நீதவான் எம்.எஸ்.எம்.முஸம்மில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் ஈரான் ஜனாதிபதி மர்ஹூம் ரைசி நட்புறவையும் , ஆதிக்கவாதமற்ற உறவினையும் பலப்படுத்திக் கொள்வதற்காக அயராது உழைத்தார்.
ஈரானின் 529 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தார்.
இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான ஈரானின் ஏற்பாடுகள் மற்றும் ஆதரவை இலங்கை அரசும், மக்களும் எப்போதும் நினைவு கூறுவார்கள்.
கவலைக்கிடமான இத்தருணத்தில் மரணித்த ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட இராஜதந்திரிகள் அனைவரதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாங்களும் எமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
அவரது சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹம்மட் மெதக்பருக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என மதுரங்குளி – கணமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் சமாதான நீதவான் எம்.எஸ்.எம்.முஸம்மில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(ரஸீன் ரஸ்மின்)