உள்நாடு

குழந்தை இலக்கியம் படைப்பது இலகுவான விடயம் அல்ல; கவிஞர் இக்பால் அலி இதனை கச்சிதமாக செய்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

”குழந்தை இலக்கியம் படைப்பது இலகுவான விடயம் அல்ல.  தாங்கள் வளர்ந்த பின்பு குழந்தைகளாக மாறி கவி படைப்பது என்பது ஒரு வித்தியாசமான கலை. ஒரு வித்துவ நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் குழந்தைப் பருவத்திற்குச் சென்று அந்த நடையில் எழுதத் துணிவது என்பது அசாத்தியமான விசயம். மகாகவி பாரதியும் அப்படித்தான் குழந்தை இலக்கியம் படைத்தார். அந்த வகையில் ஊடகவிலாளர் கவிஞர் இக்பால் அலி அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.” என்று கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்,  ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்குறணை ஐடெக் கல்வி நிலையம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்திய எழுத்தாளர், ஐ.டி.என், வசந்தம் செய்தி சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு கட்டுரைத்தொகுதி) குரங்குத் தம்பி (சிறுவர் பாடல்கள் ) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா  அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபத்தில் இயக்குனர் ஐ. ஐனுடீன் தலைமையில் இடம்பெற்றது.

முதன்மை விருந்தினர்களாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினரும், கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் வரவேற்புரையினையும், மத்திய மாகாண முன்னாள் முதல் அமைச்சரும், வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநருமான சரத் ஏக்கநாயக்க, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, மனித அபிவிருத்தி தாபனத்தின் இயக்குனரும், சர்வதேச விவசாய நிறுவனத்தின் செயலாளர் நாயகமுமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் , சமய, சமூகப் பேச்சாளரும், நெலும் ஆடைக் காட்சியகத்தின் உரிமையாளருமான தேசமானிய முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன், நூல் பற்றிய அறிமுகத்தை பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் அவர்களும், நயவுரையினை கவிஞர் ரா. நித்தியானந்தன், ஆசிரியை சர்மிளாதேவி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நூல் முதல் சிறப்புப் பிரதிகளைப் தொழிலதிபர் அல்ஹாஜ் டி. எம். எஸ். நிஸைஹிர் ஹாஜியார், மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், சந்திரவதனா ரட்ணராஜ குருக்கள் பெற்றுக் கொண்டார். திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள எழுத்தாளர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *