9ஆவது ரி20 உலகக்கிண்ணம். ஐசிசி இன் அனுமதியுடன் முதல் சர்வதேச ரி20 போட்டி.
9ஆவது ஆடவர் ரி20 உலகக்கிண்ணம் ஆரம்பிக்க இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் ரி20 போட்டிகள் தொடர்பான கட்டுரையினை நாளாந்தம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில் நேற்றைய தினம் இக் கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் ரி20 போட்டிகளின் ஆரம்பம் பற்றி பார்த்திருந்தோம். இன்று அத்தியாயம் 2 இல் ரி20 போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அனுமதிக்கப்பட்டு சர்வதேச தொடர்கள் ஆரம்பித்தமை தொடர்பில் பார்க்கலாம்.
2003ஆம் ஆண்டு இங்கிலாந்து ரி20 களகப் போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்றிருக்க அதனை சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளிப்பதற்கு பல மாதங்களை எடுத்துக் கொண்டது. பின்னர் கந்த 2005ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதியுடன் முதலாவது சர்வதேச ரி20 போட்டி கடந்த 2005ஆம் ஆணடுபெப்ரவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றது. இப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.
இப் போட்டியில் இரு அணிகளும் 1980ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் எவ்வாறான சீறுடையினை அணிந்திருந்ததோ அதே போன்ற சீருடையோடு களம் கண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக நியூஸிலாந்து வீரர்கள் 1980ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் நியூஸிலாந்தைப் பிரதிநிதித்துவம் செய்து விளையாடிய வீரர்கள் எவ்வாறு மீசை மற்றும் தாடியினை வைத்திருந்தார்களோ அதே போன்று முதல் ரி20 போட்டியில் பங்கேற்ற வீரர்களும் வைத்து போட்டியில் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.
நியூஸிலாந்தின் ஒக்லெண்ட் மைதானத்தில் இடம்பெற்ற அப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. இதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ரிக்கி பொன்டிங் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 5 சிக்ஸர்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கைல் மில்ஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் 215 என்ற கடின இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணிக்கு மிச்சல் ஹஸ்பிரோவிக் பந்துவீச்சில் இடையூறு கொடுத்து 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்ட நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமையால் முதல் சர்வதேச ரி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 44 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. முதல் போட்டியின் நாயகனான துடுப்பாட்டத்தில் அசத்திய ரிக்கி பொண்டிங் தெரிவானார்.
(தொடரும்….)
(அரபாத் பஹர்தீன்)