உள்நாடு

மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசிக்காக புத்தளத்தில் அனுதாப கையொப்பம்.

ஹெலிகாப்டர் விபத்தொன்றில் அண்மையில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸின் தலைமையில் புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அனுதாப கையொப்பங்களை பெறும் செயற்திட்டமொன்று புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த கையொப்பம் பெறும் நிகழ்வு இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் ஜமீனா இல்யாஸ், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான சப்வான் சல்மான், புத்தளம் தொகுதி அமைப்பாளர் எப்.எம்.றாபி, உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டு தமது அனுதாப குறிப்பினை பதிவு செய்து கையொப்பங்களை பதிவிட்டனர்.

இவ்வாறு பெறப்படுகின்ற இந்த கையொப்பங்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதுவர் ஆலயத்தின் ஊடாக ஈரான் நாட்டின் பதில் ஜனாதியின் அலுவலகத்திற்கு பாரப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி மர்ஹூம் ரைசி இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவியாக இருந்தது செயற்பட்டவர். மட்டுமன்றி, இலங்கைக்கும் , ஈரானுக்கும் இடையில் நீண்டகால நல்லுறவு பேணப்படுவதாவும், இந்த பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு வருகை தந்த போது, முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸூக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் “அல்குர்ஆன்” பிரதியொன்றை அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *