மதுரங்குளி, விருதோடை, சேனைக்குடியிருப்பிலிருந்து காஸா சிறுவர் நிதியத்துக்கு 11 இலட்சம்..!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனையின் பேரில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு விருதோடை – சேனைக்குடியிருப்பில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டு தன்னார்வ அமைப்பின் மூலம் ஊர், மற்றும் ஏனைய சமூக ஆர்வலர்களிடமிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற சுமார் பத்து இலட்சம் (10,000,00/=) ரூபா நிதியும் விருதோடை ஜும்ஆ பள்ளிவாசல் ஊடாக ஒரு இலட்சமும் ஆக மொத்தமாக பதினொரு இலட்சம் (11,000,00/-) நிதி நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர் .எம் றபாத் அமீன் மற்றும் விருதோடை சேனைக்குடியிருப்பில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டு தன்னார்வ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர் . மேலும் அமைப்பாளர் ஏ .ஆர்.எம் றபாத் அமீனின் வேண்டுகோளுக்கு இனங்க ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார மற்றும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் ஆகியோர் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
வடமேல் மாகாணத்திலேயே முதன் முறையாக ஜனாதிபதியின் காஸா நிதியத்திற்கான நிதி புத்தளம் மாவட்டம் மதுரங்குளி விருதோடை மற்றும் சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் எம்.யூ.எம் சனூன்)