தைரியமிக்க தலைவரை முஸ்லிம் உலகம் இழந்துள்ளது
-ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எண்மர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உலகளாவிய முஸ்லிம் உம்மாவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இஸ்லாமிய உலகிற்கு மிகவும் அவசியமான காலப்பகுதியில் தைரியமிக்க தலைவருக்கான பாரிய வெற்றிடத்தையும் தோற்றுவித்துள்ளது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி அண்டை நாடான அஸர்பைஜான் எல்லையில் நீர் மின்சார உற்பத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்குபற்றிவிட்டு திரும்பும் வழியிலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இதே போன்றுதான் ஈரானின் பங்களிப்புடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மறைந்த இப்ராஹிம் ரைஸி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்விரு நிகழ்வுகளும் உலக மக்களின் அடிப்படைத் தேவையான நீர் மற்றும் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதில் ஈரான் வழங்கி வரும் மனிதாபிமான மற்றும் அறிவியல் பங்களிப்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
இப்ராஹிம் ரைஸி ஈரானுக்கு உறுதியும் தைரியமுமிக்க தலைமைத்துவத்தை வழங்கியதைப் போன்றே உலக முஸ்லிம்களின் விவகாரங்களிலும் நலன் களிலும் அவர் தீவிர அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக பலஸ்தீன போராட்டத்திற்கான தனது ஆதரவை மிகப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்த அவர், பலஸ்தீன விவகாரத்தில் உலக முஸ்லிம்களை ஒன்றுதிரட்டுவதில் வெற்றியும் கண்டார்.
இப்ராஹிம் ரைஸியின் இழப்பானது இலங்கையிலும் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கைப் பிரஜைகள் இன, மத பேதமின்றி அவரது இழப்பு தொடர்பான தமது அனுதாபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களாக இலங்கைக்கு ஈரான் பல்வேறு வழிகளிலும் வழங்கிவரும் உதவிகளுக்கு இலங்கை மக்கள் என றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளனர். ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் மறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் ஒரு நாள் துக்க தினம் அனுஷ்டித்தமையும் ஈரான்- இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அந்தவகையில் இந்த கோர விபத்தினால் தமது தலைவரை இழந்து தவிக்கும் ஈரானிய மக்களின் உணர்வலைகளில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பங்கெடுப்பதுடன் உயிரிழந்த அனைவரினதும் மறுமைவாழ்வுக்காக பிரார்த்திக்கிறது என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.