விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். – “இருபதுக்கு இருபதின் பிரசவம்”

கனவான்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிரிக்கெட், காலத்திற்கு ஏற்றால் போல் தன் தன்மையை மாற்றி வருகிறது. ஆரம்பத்தில் 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகள், பின்னர் 5 நாட்கள் கொண்டதாக மாறியது. அதனைத் தொடர்ந்து ஒரே நாளில் போட்டி முடிவைக் காண 60 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளாக இடம்பெற்றன. பின்னர் அதிலும் மாற்றம் செய்யப்பட்டது 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இப்போது இடம் பெற்று வருகின்றது.

அதிலும் இப்போதைய இயந்திரமயமான காலத்தில் கிரிக்கெடின் விறுவிறுப்பை அதிகரிக்க அறிமுகப் படுத்தப்பட்டது தான் இருபது ஓவர்கள் கொண்ட ரி20 போட்டிகள். இப் போட்டிகள் 3 மணித்தியாலங்களில் முடிவுக்கு வருவதன் காரணமாக கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமலிருந்த அபிவிருத்தி அடைந்த நாடுகள் கூட இப்போது கிரிக்கெட்டில் மோகம் கொண்டு அதில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் இவ் வருடம் இடம்பெறவுள்ள ரி20 உலகக்கிண்ண தொடர் மேற்கிந்தியத் தீவுகளோடு சேர்த்து அமெரிக்காவிலும் இடம்பெறவுள்ளமை விஷேட அம்சமாகும்.

இருபதுக்கு இருபதின் பிரசவம்

2002ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரான பென்சன் என்ட் ஹெட்ஜஸ் கிண்ணத் தொடர் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை இளைய தலைமுறைக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்க ஒரு புதிய கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருந்தது. அத்துடன் முழு நாள் இருந்து கிரிக்கெட்டை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து சென்றமையால் அதனை அதிகப்படுத்தி ரசிகர்களின் விறுவிறுப்பையும், உட்சாகத்தையும் அதிகப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்தின் கிரிக்கெட் சபையினுடைய சந்தைப்படுத்தல் மேலாளரான ஸ்டூவர்ட் ராபர்ட்சன் இருபதுக்கு இருபது போட்டியினை மும்மொழிந்தார். அதனை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்றுக் கொள்ள வாக்கெடுப்பு நடாத்தியதுடன் இருபதுக்கு இருபது தொடருக்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைக்கப்பெற உதயமானது இருபதுபக்கு இருபது கிரிக்கெட் போட்டி.

அதற்கமைய இங்கிலாந்தில் முதல் கழகங்களுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டி கடந்த 2003ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. இத் தொடர் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றதுடன் வீரர்களுக்கும் தமது திறமையை சோர்வடையாமல் நிரூபிக்க ஏதுவாக இருந்தது.

இவ்வாறு இடம்பெற்ற முதல் கழகங்களுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டியில் சர்ரே லயன்ஸ் கழகம் வார்விக்ஷயர் பியர்ஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை  வென்றது. மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மிடில்செக்ஸ் மற்றும் சர்ரே ஆகிய கழகங்களுக்கு இடையிலான ரி20 போட்டியைக் காண 27509 பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். இது 1953ஆம் ஆண்டு இடம்பெற்ற கழகங்களுக்கு இடையிலான இறுதிப் போட்டிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

மேலும் ரி20 போட்டியினை இங்கிலாந்து ஆரம்பித்து வெற்றிகண்டமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதனை பயன்படுத்தி முதல் பாகிஸ்தான் உள்ளூர் ரி20 தொடரை ஏற்பாடு செய்து நடாத்தி எதிர்பாத்ததை விட மிக அதிகமாக வெற்றியைக் கண்டது.

(தொடரும்….)

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *