சாய்ந்தமருது லீடர் அஷ்ரபில் மலேஷிய நாட்டு உயர்ஸ்தானியரினால் குடிநீர் விஸ்தரிப்பும் குழாய்க் கிணறும் திறந்து வைப்பு..!
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் தேவை கருதி, றஹ்மத் பௌண்டேஷன் அமைப்பினருக்கு பாடசாலை சமூகம் விடுத்த வேண்டுகோளினை ஏற்று, மாணவர்களுக்கான குடிநீர் விஸ்தரிப்பு மற்றும் குழாய்க்கிணறு தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு (19) பாடசாலையில் இடம்பெற்றது.
ரஹ்மத் பௌண்டேஷன் அமைப்பின் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் மற்றும் மலேஷிய உயர்ஸ்தானியர் பட்லி ஹிஸாம் ஆதம் அவரது பாரியார் சகிதம் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
பாரம்பரியக் கலையான எம்.ஐ. அலாவுதீன் தலைமையிலான முஹம்மதிய்யா கலை மன்ற பொல்லடி மற்றும் ரபான் குழுவினரால் உயரிய கௌரவம் கொடுத்து அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வில், றஹ்மத் பௌண்டேஷன் அமைப்பின் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், வை.டபிள்யூ.எம்.ஏ. அமைப்பின் தலைவி திருமதி பவாசா தாஹா மற்றும் அமைப்பின் செயலாளர், பொருளாளர், முன்னாள் தலைவர், அமைப்பின் ஏனைய அங்கத்தவர்கள், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு வழங்கிய மாணவ மாணவிகளுக்கு உயர்ஸ்தானிகர் பாரியாரினால் மாணவர்களுக்கு இனிப்புப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பினரால் பாடசாலை சமூகத்தினால் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பாடசாலை மைதானத்திற்கான Pavilion ஒன்றை எதிர்காலத்தில் அமைத்துத் தருவதற்கான வாக்குறுதியும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)