IPL-2024. சன்ரைசர்ஸை பந்தாடி 4ஆவது முறையாக இறுதிக்குத் தெரிவானது நைட்ரைடர்ஸ்.
நடப்பாண்டின் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் ப்ளேஓப் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசஸ் அணியை மிக இலகுவாக 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி அசத்தியது.
17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் இடம்பெற்று வருகின்றது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நிறைவுக்கு சந்திருக்க குவாளிபயர் வன், எளிமினேட்டர் மற்றும் குவாளிபயர் டூ அத்துடன் இறுதிப் போட்டி ஆகியன மாத்திரமே மிகுதியாக இருக்க, லீக் போட்டிகளின் முடிவில் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலிடத்தையும், ஹைதராபாத் சன்ரைசஸ் 2ஆம் இடத்தையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் 3ஆம் இடத்தினையும், ரோயல் செலஞ்சர்ஸ் பேங்களுரு 4ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
அந்தவகையில் நேற்று (21) இடம்பெற்ற முதல் குவாளிபயர் போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகளான கல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதற்கமைய களம் நுழைந்த சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி ஆரம்ப வீரர்களான ஹெட் (0), அபிஷேக் சர்மா (3) மற்றும் ரெட்டி (9), சபாஷ் அஹமட் (0) என ஏமாற்றம் கொடுத்து பெவிலியன் திரும்ப 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது சன்ரைசர்ஸ்.
இருப்பினும் அணிக்கு சற்று ஆறுதல் கொடுத்த கிளாசன் (32), திருப்பாத்தி (55) என ஆறுதல் கொடுத்ததுடன் அணித்தலைவரான பெட் கமின்ஸ் 30 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது சன்ரைசர்ஸ். பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
பின்னர் 160 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நைட்ரைடர்ஸ் அணிக்கு நரைன் மற்றும் குர்பாஸ் ஜோடி அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவர்கள் தமக்கிடையில் 44 ஓட்டங்களை பெற்றிருக்க குர்பாஸ் 23 மற்றும் நரைன் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களில் வெங்கடேஸ் ஐயர் மற்றும் அணித்தலைவரான ஸ்ரேஷ் ஐயர் ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து தத்தமது அரைச்சதங்களை பதிவு செய்து ஆட்டமிழக்காமல் 51 மற்றும் 58 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க நைட்ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
பந்துவீச்சில் நடராஜன் மற்றும் கமின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பறினர். இந்த வெற்றியின் மூலம் கல்கத்தார நைட்ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி அசத்தியுள்ளதுடன், இரு முறை சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)