உள்நாடு

நாடளாவிய ரீதியில் “உறுமய” உறுதிப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்..! – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நாடளாவிய ரீதியில் “உறுமய” உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
காலாவதியான சில விதிகள் மற்றும் சட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் வகையில் இந்த நாட்களில் மாவட்ட மட்டத்தில் விசேட வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அதற்கமைவாக 20 இலட்சம் உரிமைப் பத்திரங்கள் வழங்கும் இலக்கை இந்த ஆண்டு முடிவடைவதற்குள் எட்ட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
உறுமய காணி  உறுதிப் பத்திர திட்டத்தின் கம்பஹா மாவட்டம் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள கொள்கை மற்றும் தொழிநுட்ப சிக்கல்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் கம்பஹா மாவட்ட மட்டத்திலும் மற்றும் பிரதேச செயலாளர்  மட்டத்திலும் பிரதேச செயலாளர்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
“உறுமய”  உறுதி உரிமைப் பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் காணி உறுதி வழங்கல் தொடர்பான நடமாடும் சேவை நடைபெற்று வருகின்றன. கம்பஹா மாவட்டத்தில் காணி நடமாடும் சேவையை  இரண்டு வாரங்களுக்குள் முடித்து வைக்குமாறு  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் 15,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. அதனை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மீரிகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விழிகுலாகந்த, மீரிகம் கந்த, ஹால்பன் கந்த, தம்புகந்த மற்றும்  களுகந்த ஆகிய ஐந்து மலைகளில் வசிக்கும் 15,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்குவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்பு அமைச்சும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு செயற்பட்டு வருகின்றன. அதனை  விரைவுபடுத்த வேண்டும் என அமைச்சர் இங்கு அறிவுறுத்தினார்.
காணி உறுதிகளை வழங்குவதில் சிக்கல்கள் உள்ள இடங்களுக்குச் சென்று அவதானித்து, பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கம்பஹா மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
உறுமய  காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு கம்பஹா தற்போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் ஒரு கூடத்தை திறந்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான அறிவை வழங்குவதற்காக மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் “உறுமய” உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
(முனீரா அபூபக்கர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *