புத்தளம் மாவட்டத்தில் 8780 குடும்பங்களை சேர்ந்த 32710 பேர் பாதிப்பு.
கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8780 குடும்பங்களைச் சேர்ந்த 32710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9 பிரதேச செயலகப் பிரிவில் 78 கிராம சேவகர் பிரிவில் 8780 குடும்பங்களை சேர்ந்த 32710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ, கற்பிட்டி , மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 12 கிராம சேவகர் பிரிவில் 6815 குடும்பங்களைச் சேர்ந்த 25529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறினார்.
அத்துடன், வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட 4 கிராம சேவகர் பிரிவில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேரும், முந்தல் பிரதேச செயலக பிரிவிக்குற்பட்ட 20 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களை சேர்ந்த 302 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவில் 59 குடும்பங்களை சேர்ந்த 187 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் 76 குடும்பங்களை சேர்ந்த 264 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவில் 39 குடும்பங்களை சேர்ந்த 109 பேரும், சிலாபம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 10 கிராம சேவகர் பிரிவில் 251 குடும்பங்களை சேர்ந்த 1059 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவில் 491 குடும்பங்களை சேர்ந்த 1741 பேரும், மாதம்பை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்களை சேர்ந்த 143 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஒன்பது வீடுகளும், ஒரு வர்த்தக நிலையமும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. மேலும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 537 குடும்பங்களைச் சேர்ந்த 1775 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்காக புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 6 பாதுகாப்பு நிலையங்களும், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 பாதுகாப்பு நிலையங்களும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் ஒரு பாதுகாப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 10 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சமைத்த உணவுகள் அந்தந்த பிரதேச பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் பிரதேச செயலக ஊழியர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபைகளுக்குற்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொண்டர் அமைப்புக்களும், மஸ்ஜித் நிர்வாகிகளும், சமூக அமைப்பினர்களும் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.
அத்துடன், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தன. இதனால், பாடசாலைகள் , அரச அலுவலகங்கள் உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கின. வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளன.
(ரஸீன் ரஸ்மின்)