நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு..! டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்
ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்த நாகை- காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ‘செரியபாணி’ என்று பெயர் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு சென்று வந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம்தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் மீண்டும் கப்பல் சேவையை தொடங்க வலியுறுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 13ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆர்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில் திடீரென கப்பல் சேவை 17ம் தேதிக்கு மாற்றப்படுவதாக கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதும் இலங்கை செல்ல 150க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.இதனிடையே சில சட்டரீதியான அனுமதி கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை வரும் 19ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அந்த தனியார் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.இந்நிலையில் சனிக்கிழமை திடீரென கப்பல் சேவை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை- காங்கேசன் துறைக்கு
கப்பல் சேவை தேதி தொடர்ந்து தள்ளி போவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து அந்த தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இயக்க முடியவில்லை. 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை. பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது.அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும். மேலும் தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகள், காலநிலை மாற்றங்களால் மறு தேதி அறிவிக்காமல் கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஒன்றிய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)