இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவா்கள் 14 போ் கைது..!
இந்திய கடற்படை கப்பலான ராணி துா்காவதி ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தது. அப்போது கோடியக்கரையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் பிற்பகல் 2 மணியளவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 5 படகுகளில் இருந்த 14 பேரை, இந்திய கடற்படையினா் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் அனைவரும் இலங்கை பருத்தித்துறையைச் சோ்ந்த மீனவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 ஃ பைபா் படகுகளுடன், இலங்கை மீனவா்கள் 14 பேரும் நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு விசாரணைக்கு பின்னா், வாகனம் மூலம் வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
கைதான இலங்கை மீனவா்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கிளிநொச்சி, அப்துல் ரசாக் முகமது நாசா் (54), மன்னாா் தாளபாடு சுகிதரன் (40), பருத்தித்துறை கிருஷ்ணன் (43), திரிகோணமலையைச் சோ்ந்த பைரூஸ் (44), நவ்ஷாத் (43), அலாப்தின் (46), எஸ்.எம்.எம். உவய்ஸ்(59), சிலாவத்துறை எஸ் .எம். இா்பான் (42), சிறாகுதூா் ஜக்கூா் (49), மதுரங்குடி தினுசன் (42), புத்தளத்தைச் சோ்ந்த ரங்கன் பிரானுன் (42), சுமித் சஞ்சீவ் (37), ரஞ்சித் இந்திகா் (38), கொட்டன் தீவு ஜமீந்தகுமாா் (44) என்பதும், இவா்கள் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அல்லது காவலில் வைத்திருப்பது குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளில் ஆயுதங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருந்தனரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.