தர்காநகர் விஞ்ஞான செயற்திட்ட மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான நிகழ்வு..!
ரூமி ஹாசிம் பவுண்டேசன் ஏற்பாட்டில் தர்கா நகர் விஞ்ஞான செயற் திட்டம் (Dharga Town Science Project) 2026 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர உயர் வகுப்பு,விஞ்ஞான பிரிவில் தமிழ்,ஆங்கில மொழிகள் மூலம் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த மேலதிக வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான பெற்றோர்,மாணவர்களுக்கான விசேட கூட்டம் எதிர்வரும் 19 திகதி (19-5-2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தர்கா நகர் இஷாஅத்துல் இஸ்லாம் சிறுவர் அபி விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெறும்.
ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் ஸ்தாபகரும் இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவருமான டொக்டர் ரூமி ஹாஷிம்,செயலாளர் அல்-ஹாஜ் ஜெஸுக் அஹமட் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர் கலந்து கொள்வர்.
பௌதீகவியல்,இரசாயனவியல்,உயிரியல் இணைந்த கணிதம் ஆகிய பாடங்களுக்கென புதிய மாணவர்கள் தொடர்ந்து பத்தாவது வருடமாகவும் இவ் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படவிருக்கின்றன.இந்த வகுப்புக்களிலும் நாட்டின் முன்னணி ஆகியோர்கள் விரிவுரையாளர்களாக கடமையாற்றுகின்றனர்.
இந்த மேலதிக வகுப்புகளில் இணைந்து விஞ்ஞான பிரிவில் கல்வி பெற விரும்பும் வெளியிடங்களைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கு மிகவும் பாதுகாப்பான சூழலில் தனித்தனியான தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு தர்கா நகரில் உள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வியை தொடரவும் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் அல்-ஹாஜ் எம்.ஜெஸுக் அஹமட் தெரிவித்தார்.
தர்கா நகர் விஞ்ஞான செயல்திட்டத்தின் மேலதிக வகுப்புகளில் கல்வியைப் பெற்ற பல மாணவர்கள் கடந்த பத்து வருட காலப்பகுதியில் மருத்துவம்,பொறியியல் உட்பட விஞ்ஞான பிரிவிலுள்ள துறைகளில் உயர் கல்வியை பெற பல்கலைக்கழக பீடங்களுக்கு தெரிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)