நீடித்த நல்லிணக்கம் ஒன்றே உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அளிக்கக் கூடிய உயர் கௌரவமாகும் -கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்
குருநாகல் நகரில் இன்று (17) நடைபெற்ற 15வது தேசிய ராணுவ வீரர்கள் நினைவுதின வைபவத்தில் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் பாதுகாப்பதற்கும் அச்சம், பயமின்றி நிம்மதியான முறையில் நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அங்கவீனமுற்றுள்ளனர் என்று கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக, பிளவுகள் மற்றும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து, நல்லிணக்கத்துடன் வாழ்வதுடன், முன்னைய இருண்ட யுகம் மீண்டும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதே ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் மற்றும் ஏனைய தியாகங்களைக் கௌரவிக்கும் வகையில் நம்மால் செய்யக் கூடிய ஒரே கை மாறாகும் என்று கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனோம்புகைக்காக காணிகள் பகிர்ந்தளித்தல், வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்தல், படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்ற விடயங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
அதே வழியை நானும் பின்பற்றி வடமேல் மாகாணத்தில் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் சார்ந்து செய்யக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்பதை நான் உறுதியளிக்கின்றேன் என்றும் கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், மாகாண சபை அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)