சட்டத் திருத்தத்தின் பின்னரே மாகாண சபை தேர்தல்..!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்த அடிப்படையிலே, குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலோ அல்லது புதிய தொகுதிவாரி முறையிலோ நடத்த முடியும் எனவும், அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் முன்னதாக குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.