உள்நாடு

ரணிலுக்கான ஆதரவை வெளிக்காட்டும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பீ க்களின் நடவடிக்கைகள்.

நாட்டில் ஒரு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது – பெரும்பாலும் அது ஜனாதிபதி தேர்தலாக இருக்க வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் உறுதி செய்த பிறகு ஜனாதிபதி தனது வெற்றியை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்து போடும் வேலைத்திட்டத்தை தனது வழமையான பாணியில் ஆரம்பித்துள்ளார்.

ஆங்காங்கே பிரதான கட்சிகளுக்குள் மோதல்களும் , தாவல்களும் முனைப்புடன் இடம்பெற்று வருகின்ற நிலையில்,- அது அம்பலத்திற்கு வரும் கட்டத்தையும் எட்டி விட்டது .

அந்த நிலையில்,கிழக்கில் பெரும் சக்தியாக இருக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் யாரை ஆதரிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு பலரின் மத்தியில் தோன்றி இருந்த நிலையில், ஊடகங்களில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது நிலைப்பாட்டை தான் சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்ந்ததாக வெளியிட்டு வருகிறார். என்றாலும்,இன்று அந்த கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மெளலானா தனதும் தனது கட்சியின் நிலைப்பாட்டை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.

அண்மைக்காலமாக அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் முன்னெடுக்கும் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பங்கேற்ற அவர் சிறிது சிறிதாக ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் முழு ஆசிர்வாதம் பெற்ற ஒரு பிரதிநிதியாக அரசாங்க வேலைத்திட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானாவுக்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில், 10 கோடி ரூபாய் கிடைக்கப்பெற்று உள்ள அதே வேளை, வீதி அபிவிருத்தி நிதியாக 20 கோடி ரூபாய்களை ஜனாதிபதி வழங்கி உள்ளார். கிழக்கில் ஒரு அரச பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான அத்தனை அதிகாரங்களும் அவருக்கு கிடைத்து உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், மாகாண ஆளுநரின் ஒதுக்கீடுகள் , இடம்மாற்றங்கள் எல்லாமே அவரின் சிபாரிசின் பேரில் ஆளுநர் அலுவலகத்தில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தரப்பில் உள்ளவர்கள் வெளிப்படுத்தி நிற்கின்றனர் .

அந்த வகையில், நேற்று ( 15/05/2024 ) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிதி ஒதுக்கீட்டு நிகழ்வில் பகிரங்கமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் , நாடாளுமன்ற உறுப்பினர் மௌலானா ,

இன்றைய தினம் அரச நிறுவனங்கள் , பொது அமைப்புக்கள் , வணக்க வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரது நிதி ஒதுக்கீடு தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய கோவையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரது படங்களை மேலேயும் , தனது படத்தினை கீழ் பக்கமாகவும் இட்டு கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ரணிலுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் மௌலானா.

இது அவரது தனிப்பட்ட தீர்மானமாக ஒரு போதும் அமையாது. எதிரணியில் கட்சி அமர்ந்திருக்க , கட்சி தலைவர் ஜனாதிபதியை நேரடியாக விமர்சித்து வருகின்ற நிலையில், தனக்கு அதிக செல்வாக்கு உள்ள பகுதியில் தலைவரின் படத்தை அவரின் அனுமதி இன்றி அரசாங்க ஒதுக்கீட்டு வேலைத்திட்டத்தில் சந்தைப்படுத்தி இருக்க மாட்டாரென்பது தெட்டத் தெளிவான உண்மை.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி அமைச்சு பதவியை பெற்ற முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆளுநரான நசீர் அஹமட் இற்கு எதிரான கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் நாடாளுமன்றம் நுழைந்த அலி சாகிர் மௌலானா, ஒரு போதும் கட்சியை புறந்தள்ளி செயற்பட மாட்டாரென்ற நிலை இருக்கும் போது கிழக்கில் ஜனாதிபதி ரணிலுக்கு அவரது படத்தை அபிவிருத்தி வேலைகளில் இணைத்து சுயமாக ஒரு போதும் மௌலானாவினால் செற்பட முடியாது ,

நேற்று நடந்த ஏறாவூர் நிகழ்வானது கட்சியின் தீர்மானத்தை தலைவர் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த தனக்கு விசுவாசமான மௌலானா மூலம் ஒரு பரீட்சார்த்த களமாகவே பயன்படுத்தி உள்ளாரா …? என்ற சந்தேகம் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் தோன்றி உள்ளது .

இது எந்த அடிப்படை என்பதை அடுத்த உயர்பீட கூட்டத்தில் எதிர்பார்க்கலாம் என சிலர் கூறுகின்றனர், தலைவர் அனுமதி அளிக்கவில்லை என்றால் இந்த ஜனாதிபதிக்கு ஆதரவான பிரச்சார நடவடிக்கைக்கு தனது படத்தை வெளியிட்ட விவகாரம் நிச்சயம் சூடுபிடிக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள் ..

அதே போல்,குறித்த கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி தலைவர் ஹரீஸ் , மற்றும் பைசல் காசிம் ஆகியோரும் ஜனாதிபதி உடன் மிக நெருக்கமான உறவை பேணும் அதே வேளை – அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அவர்களுக்கும் கிடைக்கப்பெற்று உள்ளதனை அந்தந்த மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவின் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும் ,

அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களது நூதனசாலை கல்முனையில் அமைக்கும் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டு தகவலும் வெளியாகி உள்ளதுடன் , கடந்த வாரம் பாராளுமன்றில் ஹரீஸை சந்தித்த ஜனாதிபதி, அடுத்த முஸ்லிம் தலைவர் இதோ என அனைவர் மத்தியிலும் குறிப்பிட்டுச் சொன்னமை பேசு பொருளாகி இருக்கும் நிலையில், பலமுள்ள அமைச்சு பதவிகளில் எல்லாம் தலைவர் இருந்த நேரம் எல்லாம் கட்சியின் ஸ்தாபக தலைவருக்கு அவரது பெயரில் அவரின் தொகுதியில் நூதனசாலை அமைக்க முடியாமல் இருந்த நிலையில், சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ஹரீஸ் இந்த விவகாரத்தை ஜனாதிபதி மூலம் நிறைவேற்றி இருப்பது பெருந்தலைவரை நேசிக்கும் உணர்வுள்ள கட்சி போராளிகள் மத்தியில் நிச்சயம் கிழக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம் , அல்லது இவ்வாறான நகர்வுகள் தலைவரின் ஆசீர்வாதத்துடன் கிழக்கு மக்களை ரணிலின் பக்கம் சாய வைக்கும் உத்தியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எது எப்படி என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா தனது நிதி ஒதுக்கீட்டு பத்திரத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு நிலைப்பாட்டை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நேரடி வேலைத்திட்டத்தை பகிரங்கமாக தொடங்கி வைத்து விட்டார் என்பது உறுதியான ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *