Monday, November 25, 2024
உள்நாடு

கணமூலை – கந்ததொடுவா வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…!

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட கணமூலை – கந்ததொடுவா வீதி காபர்ட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் நேற்று (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸின் வேண்டுகோளுக்கு இணங்க, மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிந்தக அமல் மாயாதுன்ன ஆகியோரின் சிபார்சில் இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த வீதியின் புனரமைப்பு பணிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியொதிக்கீடு செய்துள்ளதுடன், 5.5 கிலோ மீற்றர் வரையான குறித்த வீதி, காபர்ட் வீதியாக புனரைக்கப்படவுள்ளன.

இந்த வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சிந்தக அமல் மாயாதுன்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன், மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மனைவி சமரி பிரியங்கா பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஏ.ஜே.எஸ்.மரிக்கார், தொழிலதிபர் அஸ்ரின் அலாவுதீன் , தாருஸ்ஸலாம் ஜனாஸா அமைப்பின் தலைவர் எம்.எஸ்.முஸம்மில் உட்பட மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், சமூக அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

(ரஸீன் ரஸ்மின்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *