உள்நாடு

வடமேல் மாகாணத்தில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த மாதத்திற்குள் தீர்வு..!

வடமேல் மாகாணத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்க ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுனர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடல்

நேற்று முன்தினம் (14) ஆளுனரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இதற்கான 
பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வடமேல் மாகாண பிரதம செயலாளர், ஆளுனரின் செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வடமேல் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், வடமேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாணத்தில் நிலவும் அதிபர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது குறித்தும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாகாண மட்டத்தில் அதிபர் இடமாற்றம் குறித்த பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பதை அவதானித்த ஆளுநர், அதிபர் இடமாற்றங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனரின் செயலாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கு ஆளுனர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது ஒரே பாடசாலையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கடமையாற்றுவோர், கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆளுனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் ஏனைய மாகாணங்களில் இருந்து வடமேல் மாகாணத்தில் கடமைபுரிவோரை துரிதமாக சொந்த மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

எதிர்கால சந்ததியை வலுப்படுத்தும் வகையில் மாகாண மட்டத்திலான கல்வி நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, குறைபாடுகளைக் களைந்து, கல்வி அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது ஆதரவை வழங்குவதாகவும் ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இங்கு குறிப்பிட்டார்.

அதிபர் இடமாற்றங்கள் தொடர்பான விபரங்களை இணையத்தளம் ஊடாக விரைவில் வௌியிட ஏற்பாடு செய்வதாக ஆளுனரின் செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.

 

(ரஸீன் ரஸ்மின்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *