விளையாட்டு

நான் எதிர்பார்த்த வீரர்களுடனும், பாரிய நம்பிக்கையுடனும் அமெரிக்கா நோக்கிப் பயணிக்கிறேன்; வனிந்து ஹசரங்க.

அணியின் தலைவராக தேர்வுக் குழுவிடம் நான் கோரியிருந்த அணி வீரர்கள் தான் எனக்கு கிடைத்துள்ளனர். தேர்வாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவேஇ தலைவர் என்ற விதத்தில் பாரிய நம்பிக்கையுடன் நான் அமெரிக்கா பயணிக்கின்றேன் என்றார் இலங்கை ரி20 அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடருக்காக முதல் அணியாக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி நேற்று அமெரிக்கா நோக்கிப் பயணமானது. இதில் குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்ணான்டோ ஆகிய இரு வீரர்கள் விசா தாமதம் காரணமாக பயணித்திருக்க வில்லை. மேலும் மகேஷ் தீக்சன, துஷ்மந்த சமீர மற்றும் விஜயகாந்த வியாஸ்காந்த ஆகிய மூவரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றிருப்பதால் இலங்கை அணியோடு பயணித்திருக்கவில்லை. மற்றைய அத்தனை வீரர்களும் அமெரிக்கா சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா நோக்கிப் பயணிக்கும் முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் தலைவரான வனிந்து ஹசரங்க இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், ”அணியின் தலைவராக தேர்வுக் குழுவிடம் நான் கோரியிருந்த அணி வீரர்கள் தான் எனக்கு கிடைத்துள்ளனர். தேர்வாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தலைவர் என்ற விதத்தில் பாரிய நம்பிக்கையுடன் நான் அமெரிக்கா பயணிக்கின்றேன். எமது பந்து வீச்சாளர்கள் சிலர், தற்போது நடைபெற்று வருகின்ற ஐபிஎல் தொடரில் கலந்துக்கொண்டு அனுபவங்களை பெற்றுக்கொண்டே ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு வருகைத் தருகின்றார்கள். அதேபோன்று எமது துடுப்பாட்ட வீரர்களும் இறுதியாக நடைபெற்ற 3 தொடர்களிலும் சிறந்த முறையில் பிரகாசித்துள்ளனர். எனவே இம்முறை ரி20 உலகக் கிண்ணத்தில் நிச்சயம் எம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ரி20 உலகக் கிண்ணத் தொடரை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் நோக்கில் தான் 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்வதற்கு தீர்மானித்தோம். போட்டியை நடத்தும் நாடான அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் குறித்து சரியான புரிதல் இல்லாததால், முன்கூட்டியே அங்கு புறப்பட்டுச் செல்வது மிகவும் அவசியம். அதன்படி, போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, எமது வீரர்களுக்கு சில நாட்கள் அங்கு பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பளித்து, ஆடுகளங்களை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பளிப்பதே எமது அணி நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது.” என்றார் வனிந்து ஹசரங்க.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *