சுற்றுமதிலற்ற நிலையில் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம் அரசியல்வாதிகள் உதவ முன்வருவார்களா..?
சாய்ந்தமருதில் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் மிகவும் பின்தங்கிய ஒரு பாடசாலையாகக் காணப்படுகிறது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிள்ளைகள் அதில் கல்வி கற்கின்றனர்.
இந்தப் பாடசாலையில் 100 மீட்டர் நீளமான சுற்றுமதில் கட்டப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அந்த சுற்றுமதில் கட்டப்படாமையின் காரணமாக சுற்றுமதில் அற்ற அந்த இடங்களில் இருந்து துர்நாற்றம் வீசக் கூடிய குப்பை
கூலங்கள் அவ்விடத்தில் வீசப்படுவதுடன் துஷ்பிரயோக நடவடிக்கைகளும் இதன்மூலம் ஏற்படுகின்றன. அதாவது போதைப்பொருள் பாவனையாளர்கள் பாடசாலைக்கு வருவதூடாகவும் உள்ளே இருந்து கொண்டு அதனைப் பாவிப்பதாகவும் அதனைக் கைமாற்றும் இடமாக இப்பாடசாலையைப் பயன்படுத்துவதற்கும் இந்த சுற்றுமதில் இல்லாததுதான் மிகப்பெரும் காரணம்.
ஆகவே, காலத்தின் கட்டாயம் அந்த சுற்றுமதிலை அவசியமாக அதேநேரம், அவசரமாகச் செய்ய வேண்டியுள்ளது.
எனவே, பல அரசியல்வாதிகளிடமும் இந்த சுற்றுமதிலைச் செய்து தருமாறு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப் பலரிடமும் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். ஆனால், இது விடயமாக எந்த அரசியல்வாதியும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தவுமில்லை. கிஞ்சித்தும் செவி சாய்க்கவும் இல்லாது பாராமுகமாகவே இருக்கின்றனர்.
அரசியல்வாதிகள், எம்.பி.மார்கள் பலர் தற்பொழுது அவர்களது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பல பல செயற்பாடுகளுக்கு அவர்களது சொந்த நிதியைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்தப் பாடசாலைக்கும் அவர்களது பண்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கினால் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.
எனவே, மிகவும் பின் தங்கிய பாடசாலையாக காணப்படும் சாய்ந்தமருது பொலிவேரியின் எம்.எஸ். காரியப்பர் வித்யாலயத்தின் சுற்றுமதிலை அமைத்துக் கொடுப்பதன் மூலம் இதன் மூலமாக இடம்பெறுகின்ற பல குற்றச் செயல்களைத் தடுக்க முடியும். இதற்கு அரசியல்வாதிகளோ அல்லது தனவந்தர்களோ உதவ முன் வருவார்களா?
(எம்.எம்.எம்.ஸாகிர்)