சாதாரண தர பரீட்சையை இன்று நிறைவு.இம்சைகள், சேஷ்டைகள், குறும்புத்தனங் களில் எல்லை மீறாதிருப்போம்!
இன்று GCE O/L பரீட்சைகள் நிறைவுறுவதால் மாணவ மாணவியர் தமது மன அழுத்தத்தை தணித்துக் கொள்ளவும், ஆரம்பக் கல்வி வாழ்க்கையில் பிரதான மைற் கல்லை தாண்டியும் விட்ட மகிழ்ச்சியிலும் சில குறும்புத் தனங்கள் சேட்டைகளில் ஈடுபடுவார்கள்!
குறிப்பாக தமது சீருடைகளில் சொட்டு நீலத்தை பரஸ்பரம் வீசி கேளிக்கைகளை செய்யும் வழமை இப்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. ஒரு சிறந்த வாழ்வு நெறியைக் கொண்டுள்ள சமூகம் என்ற வகையில் ஏனைய சமூகங்களூக்கும் முன்மாதிரியான சில மாற்றீடுகளை தம்மால் செய்ய முடியுமாயின் அது வரவேற்கத் தக்கதாக இருக்கும்.
அருகில் உள்ள மஸ்ஜித்களில் சென்று பூரணமாக வுழூ செய்து இரண்டு ரக்ஆத் தஹிய்யதுல் மஸ்ஜிதை தொழுது விட்டு ஸஜ்ததுத் ஷுக்ர் தொழுது விட்டு எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி கூறி தத்தமது எதிர்கால கல்வி தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைய துஆ செய்து சக தோழர்களுடன் முஸாபஹா செய்து கண்ணியமாக வீடுகளுக்கு திரும்பலாம்.
வெறும் அறிவுறுத்தல்களை மட்டும் கூறாது அவ்வாறு மஸ்ஜித்களுக்கு வரும் மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் பானங்களை மஸ்ஜிதுகளில் ஏற்பாடு செய்து அவர்களை வரவேற்று வாழ்த்தி ஊக்குவிக்கும் மரபை நாம் கடைப்பிடிக்கலாம்!
பெண் மாணவிகளுக்கு பாதையோரங்களில் நின்று கேளிக்கைகள் செய்வதனை நாம் தவிர்த்துக் கொண்டு அவர்கள் பாதுகாப்பாக கெளரவமாக வீடுகளுக்கு செல்வதற்கு இடைஞ்சல்கள் செய்யாது நாம் நடந்து கொள்ள வேண்டும்.
அந்தந்த வயதில் அந்தந்த குறும்புகளை சேட்டைகளை கேளிக்கைகளை செய்யாமல் வேறு எப்போது செய்வது என சாத்தான்கள் கூட அதிகப் பிரசங்கித் தனமாக சாத்திரங்கள் சொல்வார்கள்.
அந்தந்த வயதில் செய்ய வேண்டியவற்றை மானுட சமய சன்மார்க்க வரம்புகளை கட்டுடைக்காது நடந்து கொள்வதே எமது வாழ்வியல் ஆகும்.
இதே போன்று பல்கலைக் கழகங்களிலும், திருமணங்களின் போதும் ராக்கிங் மற்றும் கேளிக்கைகள் விரும்பத்தகாத மட்ட ரகமான குறும்புத் தனங்களில் நாம் ஈடுபட்டு அழகிய தருணங்களை எல்லாம் அசிங்கப்படுத்திக் கொள்கிறோம்!
சேட்டைகளில் குறும்புத் தனங்களில் எல்லை மீறாது, வீணாக தமது சீருடைகளை சேதப்படுத்திக் கொள்ளாது வேறு அழகிய தருணங்களை ஞாபகங்களை நாம் ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
மாணவர்களின் தாய் தந்தையரின், ஆசிரியர்களின், உலமாக்களின், பெரியவர்களின் உணர்வுகளை காயப்படுத்துகின்ற அல்லது அவர்களது ஏச்சுப் பேச்சுகளை, திட்டல் சாபமிடலை தூண்டுகின்ற, அல்லது பலவீனமான சக மாணவர்களின் மன நிலைகளை பாதிக்கின்ற விதத்தில் நாம் நடந்து கொள்ளாது சகலரும் சந்தோஷப்படுகின்ற சிறந்த நினைவுகளை விட்டுச் செல்வோம், இனாஷா அல்லாஹ்.
வளமான வருங்காலம் அமைய வல்ல அல்லாஹ் அனைத்து மானவச் செல்வங்களிற்கும் காரண காரியங்களை வசமாக்கித் தருவானாக!
(மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்)