சகலதுறையில் பிரகாசித்த பாகிஸ்தான்; தொடரை இழந்தது அயர்லாந்து .
அயர்லாந்து அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் சஹீன் அப்ரீடியின் வேகமும், பாபர் மற்றும் ரிஸ்வானின் அரைச்சதங்களும் கைகொடுக்க 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2:1 என கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், 2 போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்று தொடரை 1:1 என சமன் செய்திருந்தது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று டப்லினில் இடம்பெற்றது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய களம்நுழைந்த அயர்லாந்து அணிக்கு லோகன் டக்கர் அரைச்சதம் கடந்து 73 ஓட்டங்களையும், பொல்பிரைனி 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது, பந்துவீச்சில் சஹீன் அப்ரீடி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் 179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழமை போன்று ஆரம்ப வீரரான சைம் ஐயூப் ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் 2ஆவது விக்கெட்டில் இணைந்த முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் ஜோடி அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்று தத்தமது அரைச் சதங்களை பதிவு செய்ததுடன் சதம் கடந்த இணைப்பாட்டத்தையும் பூர்த்தி செய்தது.
இந்நிலையில் முஹம்மது ரிஸ்வான் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க , பாபர் அஸாம் 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அஸாம்கான் 18 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுக்க பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரை 2:1 கைப்பற்றியது. போட்டியின் நாயகனாக சஹீன் அப்ரீடி தெரிவானார்.