உள்நாடு

அமைச்சரவைத் தீர்மானங்கள்.

2024.05.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

01. பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவத்தை (Results Based Management) அரச துறையில் நிறுவனமயப்படுத்தல்

கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் நிரல் அமைச்சுடன் இணைந்து உயர்ந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு செய்யப்படும் அமைச்சுகள் 10 உம், அதன் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களில் ‘அமைச்சு ரீதியான பெறுபேறுச் சட்டகம்’ தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சின் படிநிலைப் பொறுப்புக்களுடன் இணங்கியொழுகி, குறித்த நிறுவனங்களின் விடயதானங்களில் அபிவிருத்தி இலக்குகளை சமகாலத்துடன் வெற்றிகரமாக அடைந்து கொள்ளல் மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளல் குறித்த அமைச்சின் பெறுபேறுச் சட்டகத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன், மக்களுடைய தேவைகளை துரிதமாக நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளின் உற்பத்தித்திறனை அளவிடக்கூடிய பெறுபேறுகளுக்கான நிறுவனக் கட்டமைப்புகள் இதன் மூலம் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சு ரீதியான பெறுபேற்று சட்டகங்களில் உள்ளடங்கியுள்ள இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்வதற்கான பொறுப்புக்களை குறித்த நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஒப்படைப்பதற்கும், குறித்த பணிகளின் செயலாற்றுகையை கண்காணிப்பு தேசிய நடவடிக்கை மையத்துக்கு ஒப்படைப்பதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கை சேமிப்பு வங்கியின் ஊழியர்களுக்காக சுயமாக ஓய்வுபெறும் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தல்.

2019 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கியின் முழுமையான உரித்துடன் கூடிய நிர்வாகக் கம்பனியாக உருவாக்கப்பட்டுள்ள இலங்கை சேமிப்பு வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைப்பதற்கும், அதன் ஊழியர்கள் உள்வாங்குவதற்கும் தற்போது தேசிய சேமிப்பு வங்கியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை சேமிப்பு வங்கியின் ஊழியர்களை நிலைப்படுத்தல் செயன்முறை தற்போது மேற்கொள்ளப்படுவதுடன், அதன் மாற்று வழிமுறையாக சுயமாக ஓய்வு பெறுகின்ற முறையை அறிமுகப்படுத்துவதற்கும், சுயமாக ஓய்வு பெறுகின்ற ஊழியர்களுக்காக சந்தைக் காரணிகளை கருத்தில் கொண்டு கொடுப்பனவைச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்கு சுயமாக ஓய்வு பெறும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. தேசிய தொழில் தகைமை 4 ஆம் மட்டம் (NVQ 4) தொழில் பயிற்சி வழங்கும் போது உயர்தர தொழில் பாடவிதான மாணவர்களுக்கு வழங்கல்.

க.பொ.த (சா/தரம்) பரீட்சையில் தேர்ச்சி பெற்றஃதேர்ச்சி பெறாதமையைக் கருத்தில் கொள்ளாமல் உயர்தர தொழிற்கல்விப் பாடவிதானத்தை பயில்வதற்காக மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், தற்போது அனைத்துக் கல்வி வலயத்தையும் உள்ளடக்கியவாறு 604 பாடசாலைகளில் பாடவிதானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். குறித்த பாடவிதானத்தின் கீழ் 12 ஆம் தரத்தில் மென்திறன் அபிவிருத்தி செய்யப்படும் பொதுவான பாடவிதானங்கள் பயில வேண்டியதுடன், 13 ஆவது தரத்தில் தேசிய தொழில் தகைமை 4 ஆம் மட்டம் (NVQ 4) பாடநெறியை 06 மாதங்கள் பயில்வதற்கும், 06 மாதங்கள் தொழிலிடத்துப் பயிற்சியில் ஈடுபடுவதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும். குறித்த மாணவர்களுக்கு (NVQ 4) மட்டத்தில் பாடநெறி நடாத்துவதற்காக 07 அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 17 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தற்போது கல்வி அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வந்துள்ளன. தற்போது தொழிற்கல்விப் பாடவிதானத்தைப் பயில்வதற்காக 50,000 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், குறித்த தொழிற் பயிற்சியை வழங்குவதற்காக அரச அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களால் குறித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அனைத்து அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களால் உயர்தர தொழிற்கல்விப் பாடவிதானத்தை பயில்கின்ற மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குதல் கட்டாய பணியாக மாற்றுவதற்கும், குறித்த நிறுவனங்களில் (NVQ 4) பாடநெறிகளுக்கு வருடாந்தம் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்ளும் போது தொழிற்கல்வி பாடவிதான மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பயிற்சிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. கல்விப் பொதுத் தராதர (சாதாரணதர) பரீட்சை முடிந்தவுடன் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) வகுப்புகளை ஆரம்பித்தல் .

கல்விப் பொதுத்தராதர (சாதாரணதர) பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில் மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த (உயர்தர) பாடவிதானங்களை உள்ளடக்குவதற்காக ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2024 ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்குரிய 2024 மே மாதம் க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த (உயர்தர) வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மின் பாவனையாளர்களுக்காக சுழற்சி சக்தி வசதி (Power Wheeling Facility) நடைமுறைப்படுத்தல்.

மின்சக்தி தேவைகள் காணப்படுகின்ற இடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்காக மின்சார விநியோகம் மற்றும் மின் கடத்தித் தொகுதிகளுடன் கூடிய மின்சக்தி தொகுதியை கூட்டாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் அணுகல் வசதி, சுழற்சி சக்தி வசதிகள் (Power Wheeling Facility) என அழைக்கப்படும். கட்டண விதிப்பின் கீழ் தற்போது காணப்படுகின்ற மின் தொகுதியைப் பயன்படுத்தி தமக்குரிய வேறு இடத்தில் கானப்படுகின்ற மின் விநியோகமொன்றை வலுசக்தி செலவை பயனுள்ளவாறு குறைத்துப் பயன்படுத்துவதற்கு சுழற்சி சக்தி வசதிகளின் கீழ் மின் பாவனையாளர்களுக்கு வசதியளிக்கப்படும். குறித்த பொறிமுறையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இன்மையால் குறித்த வசதிகளை வழங்குவது பற்றி விபரங்களுடன் கூடிய கற்கைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் புதிய மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களுக்கு மாத்திரம் சுழற்சி சக்தி வசதியை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேரை தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமித்தல்.

1985 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மனிதவலுப் பயன்பாடு மற்றும் துணை இராணுவ சட்டத்தின் V பிரிவின் கீழ் துணை இராணுவ நிறுவனமாக தேசிய மாணவர் படையணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் முறையாக குறித்த படையணியின் அதிகாரிகள் மற்றும் மாணவர் படையினராக இணைக்கப்படுகின்றனர். கல்வித் துறையில் மாணவர் படை நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்காக பதவிநிலை அதிகாரிகளாக இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை போன்ற சேவைகளுக்குரிய அதிகாரிகளை தேசிய மாணவர் படையணியில் இணைத்துக் கொள்வதற்காக அடிப்படை பயிற்சி பாடநெறியை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த சேவைகளில் i,ii மற்றும் iii ஆம் தரங்களிலுள்ள அதிகாரிகள் 1,000 பேரை இணைத்துக் கொள்வதற்கான அடிப்படை பயிற்சி பாடநெறியின் பின்னர் பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை போன்ற சேவைகளுக்குரிய தகைமை வாய்ந்த அதிகாரிகள் 1,000 பேருக்கு முறையாக தெரிவு செய்யப்பட்ட 03 பிரிவின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தொழில்நுட்ப ஊக்குவிப்பு சட்டமூலம்.

டிஜிட்டல் அபிவிருத்திக்குத் தேவையான நிறுவன மீள்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக மற்றும் 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான கருத்தாக்கப் பத்திரத்தை தயாரிப்பதற்காக 2023.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய டிஜிட்டல் அபிவிருத்திக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு கருத்தாகப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் தொழில்நுட்ப புத்தாக்கப் பேரவை மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி முகவராண்மையை தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தை இரத்து செய்து தொழில்நுட்ப ஊக்குவிப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும், தயாரிக்கப்பட்ட கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில், சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துதல்.

துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை 2024 ஆம் ஆண்டின் 50 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் ஒரு சில அமைச்சர்களுக்கு 212.59 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகளில் 13 கருத்திட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடன் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டம் முடிவடையும் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பயன்கள் கிராமிய மக்களுக்கு இல்லாது போயுள்ளது. குறிப்பாக கிராமிய வீதிகள், பாலங்கள், சிறிய குளங்கள், கால்வாய்கள் மேம்படுத்தல், கிராமிய தொழில்முயற்சி விருத்தி வேலைத்திட்டங்கள் போன்ற கிராமிய பாடசாலைகள், மருத்துவமனைகள், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான கடன் மற்றும் கிராமிய நீர்வழங்கல் போன்ற அபிவிருத்தி கருத்திட்டங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அதற்குத் தீர்வாக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் எதிர்பார்க்கின்ற எஞ்சிய நிதி கிராமிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அத்தியவசிய அபிவிருத்தி பணிகள் மற்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்து பயன்படுத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு முன்மொழிவை சமர்ப்பிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டம்.

கடமைகளின் போது உயிர் நீத்தவர்கள், காணாமல் போனோர் மற்றும் இயலாமைக்குட்பட்டோர், இளைப்பாறிய அத்துடன் தற்போது பணியில் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முப்படையினர் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினருக்கு வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பொறிமுறை தொடர்பாக காணி ஆணையாளர் நாயக்கத்தினால் அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அவ்வப்போது சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு முறையின் கீழ் இராணுவத்தினருக்கு உரித்தாகின்ற சலுகைகள் போதியளவாக இன்மையால், அனுபவித்துக் கொண்டிருக்கும் காணிகளுக்காக நிபந்தனைகளுடன் கூடிய சட்டபூர்வ ஆவணங்களில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகளால் குறித்த காணிகளில் உண்மையான பொருளாதார பெறுமதிகளை எடுத்தியம்பப்படுவதில்லை என்பது கண்காணிக்கப்பட்டுள்ளது. அதனால் இராணுவத்தினருக்கு காணிகளை வழங்கும்போது தற்போது கடைப்பிடிக்கப்படுகின்ற பொறிமுறையால் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உள்ளடங்கிய தற்போதுள்ள பொறிமுறையை திருத்தம் செய்வதற்காக தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

10. பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம்.

2024.03.25 ஆம் திகதி இடம்பெற்று அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதார நிலைமாற்ற சட்டமூலத்தின் அடிப்படை சட்டமூலத்துக்கு கொள்கை ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உள்ளடங்கிய முறையான சட்டமூலத்தை துரிதமாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *