உள்நாடு

36 வருட ஆசிரியர் சேவையிலிருந்து திருமதி ரஸீதா ஆசிரியை ஓய்வு..!

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாகவும் பகுதித் தலைவியாகவும் கடமையாற்றிய திருமதி றஸீதா அப்துல் நாபித், தமது 36 வருட ஆசிரியர் பணியில் இருந்து நேற்று (12) ஓய்வு பெற்றார்.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவில் ஆதம்பாவா உமறுலெவ்வைக்கும் முஹம்மது காசிம் குழந்தையும்மாவுக்கும் 3ஆவது பெண் பிள்ளையாக ரஷீதா எனும் நாமத்துடன் 1964.05.13 ஆந் திகதி திங்கட்கிழமை  இப்பாரினில் அவதரித்தார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், பல இன்னல்களுக்கு மத்தியில்  சாய்ந்தமருது மல்-ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் தரம் 6 இனை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் தரம் 7 தொடக்கம் உயர்தரம் (விஞ்ஞானப்பிரிவு) வரை தனது தந்தையின் பிறப்பிடமான நிந்தவூர் அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயத்திலும் (தேசிய பாடசாலையிலும்) கல்விபயின்றார். உயர் கல்விக்காக வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தெரிவாகி, பட்டப்படிப்பைத் தொடர்ந்த இவர், ஒரு வருட முடிவில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தோற்றி, சித்தியடைந்ததன் காரணமாக தனது பட்டப்படிப்பை இடைநடுவில் நிறுத்திவிட்டு, 1988.08.29இல் ஆரம்பக் கல்வி ஆசிரியர் நியமனம் பெற்று சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் தமது முதல் நியமனத்தை ஏற்றார்.
1991/1992 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்ட இவர், 1993.01.01 முதல் 1996.07.08 வரை சாய்ந்தமருது மழ்-ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தல் தமிழ்பாட ஆசிரியையாகவும், 1996.07.08 முதல் 2009.10.22 வரை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திலும், 2009.10.23 முதல் 2011.12.31 வரை சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்திலும், 2012.01.01 முதல் 2021.02.07 ஆந் திகதி வரை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்திலும், 2021.02.08 ஆந் திகதி முதல் அவரது 60ஆவது வயது பூர்த்தி தினமாகிய 2024.05.12ஆந் திகதிவரை சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் ஆரம்பக் கல்வி ஆசிரியையாகவும் பகுதித் தலைவியாகவும் அர்ப்பணிப்பான சேவைகளை சிறப்புற ஆற்றியுள்ளார்.
1995.05.19இல் அகமட்லெவ்வை அப்துல் நாபீத் (சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் ஸ்தாபக ஓய்வுநிலை அதிபர்) அவர்களுடன் இல்லறத்தில் இணைந்துகொண்டு மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும்  தாயான இவர், இறைபக்தியும் பக்குவமிக்க குடும்பத் தலைவியாகவும் பேணுதலுடையவராகவும் பிரகாசித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், இலக்கியத்துறையிலும் தமது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிக்கொணர்ந்துள்ளார். பெண்களின் இலக்கிய ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் ஸ்ரீலங்கா பெண்கள் கழகம், அம்பாரை மாவட்ட தமிழ் மேம்பாட்டுப் பேரவை ஆகியவற்றில்  அங்கம் வகித்து இலக்கியத்துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.  பூவுக்குள் புயலின் அமைதி, திருட்டு முழியும் நமுட்டு சிரிப்பும், சின்னமகள், மரமாகி வரமாவேன், பொன்மொழி, அந்தாதி, கவிதையின் பூவுக்குள் புயலின் அமைதி, எரிகிறது மனசு, நில், மூடு, எடு, ஓடு என்ற தலைப்புக்களில் பல கவிதைகளை யார்த்து நாழிதழ்களில் பிரசுரமாகியிருந்தன.
பல் திறமையும் ஆளுமையும் கொண்ட இவ்வாசிரியையின் ஓய்வு வளர்ந்துவரும் எமது பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் களிக்கவும் தேக ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோகத்தர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகம் என்பன ஒன்றிணைந்து அண்மையில் இடம்பெற்ற சேவைநலன் கௌரவிப்பு நிகழ்வில் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *